இங்கே துலாவு

திங்கள், 31 மே, 2021

முட்டாப் புலவன்

அன்று பேருந்தில் இறங்கி எனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். எங்கள் ஊர் கிராமப்புறம் என்பதால் இங்கே ஒத்தையடிப்பாதைகள்தான் அதிகம். எனது வீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவன் திடீரென வழியைத் தவறவிட்டு விட்டேன். வழியைக் கண்டுபிடிக்க முயன்ற போது, ஒரு முள்ளுப் பத்தைக்குள் மாட்டிக்கொண்டேன். முட்கள் இழுத்து சட்டையும் லேசாகக் கிழிந்துவிட்டது. பிறகு ஒரு வழியாக பாதையைக் கண்டுபிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

சனி, 22 மே, 2021

என் வாழ்வில் 2020 கடந்ததும் நடந்ததும்:

கொஞ்சம் பெரிய பதிவு. அத்தனை முக்கியமானதுமில்லை. எனவே விரும்புபவர்கள் படிக்கலாம். மற்றவர்கள் கடந்து செல்லலாம்.

இப்போதெல்லாம் காலம் விரைவாக உருண்டோடுவதால், ஓராண்டு என்பது மிகக் குறுகிய காலமாகத் தெரிகிறது. அதனால், கடந்தாண்டு நிகழ்வு கூட நடப்பு ஆண்டில் நிகழ்ந்ததாக தோற்ற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனவே நடந்தவற்றை எழுதி வைத்துக்கொண்டால் நாள பின்ன எனக்கு உதவலாம் என்பதால் எழுதுகிறேன். முகநூல் வழக்கப்படி இதுபோன்ற பதிவுகள் டிசம்பர் இறுதியில்தான் பதிவிட வேண்டும் என்பது விதி. ஊர் கட்டுப்பாட்டை மீறியதற்காக என்னை பொறுத்துக் கொள்க.

பேருந்துப்பயணத்தில் ஒலிக்கும் பாடல்களால் ஒளிரும் சிந்தனைகள்

இன்று பேருந்தில் வரும்போது, நிலவை கொண்டு வா பாடலை பேருந்தில் ஒலிக்கவிட்டுக்கொண்டு வந்தனர். அது ஃபர்ஸ்ட் நைட் சாங் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சொல்லாமலே தெரியும்.

 வழக்கமாக பசங்க தான் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு கூடுதல் மன எழுச்சியுடன் இருப்பார்கள்.

ஆனால் இந்தப் பாடலில் பெண்குரல் உற்சாகமாக,  இன்று முதலிரவு   என பாடும்.

 ஆனால் ஆண் குரலோ, ஒரு சந்நியாசியை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்தது போன்ற சோகத்தில் பாடும்.  (இன்றுமுதல் இரவு) இந்த வரியை கேட்டதுமே, அது எனக்கு உறுதியானது. கல்யாணம் ஆன பின்பு என் வாழ்க்கையே இருளில் மூழ்கி விட்டது என்று பாடுகிறார்.

ஒரே ஒரு வார்த்தை பிழை ஃபர்ஸ்ட் நைட் சாங்கை தத்துவ பாடலாக தரமுயர்த்தி விடுகிறது. 

வரமான வாக்கியம்

நான் பணிபுரியும் அரசுப்பள்ளியில்  மாணவர்களும் சரி, அவர்களது பெற்றோரும் சரி கல்வியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதைக் காணும்போது அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம்தான் எனக்குள் ஏற்படும்.

எனக்கு அது இன்னும் நினைவிலிருக்கிறது.

எனக்கு நான்கு வயது இருக்கும்போது அரவிந்த் மருத்துவமனையில் என் கண்களை பரிசோதித்த மருத்துவர், "பார்வை நரம்பு விழிக்கோலத்துடன் இணையாததால் குழந்தைக்கு பார்வை கிடைக்க வாய்ப்பே இல்லை" என என் பெற்றோரிடம் சொன்னார்.

அதைக்கேட்டதும் அங்கேயே என் அம்மா உடைந்து அழத் தொடங்கி விட்டார். அழாதீங்கம்மா. பையன படிக்க மட்டும் வச்சிருங்க போதும். அவன் வாழ்க்க நல்லபடியா அமைஞ்சுடும் என்றார் அந்த பெண் மருத்துவர்.

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனது அம்மா அந்தம்மா அன்னைக்கு சாமி மாதிரி சொன்னுச்சு. அது எத்தனை உண்மையா போச்சு என்கிறார்.

என் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் அந்த மருத்துவர் சொன்ன ஒரு வாக்கியந்தான்..

சாப்பாட்டு நேரத்தில் உதிக்கும் சாப்டான சிந்தனைகள்

காளான் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுந்நு, இன்று Swiggy-யில் காளான் பிரியாணியும் காளான் 65 ஐயும் ஆர்டர் செய்தேன். இரண்டும் சேர்த்து 253 ரூபாய் வந்தது. Swiggy-யிலிருந்து முதலில் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தகவல் வந்தது, பிறகு, அதில் ஒன்று மட்டும் அவுட் ஆப் ஸ்டாக் என்று தகவல் வந்தது, கடைசியாக அந்த கடையே இயங்கவில்லை என்று தகவல் வந்தது. 

நான் காளான் சாப்பிட ஆசைப்பட்டது தப்பா என என் மனம் கொந்தளித்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. கடும் சோகத்தின் காரணமாக கீழே இருந்த நான்வெஜ் ரெஸ்டாரன்டை கிளிக்கி உள்ளே நுழைந்து ஒரு மட்டன் பிரியாணியும், சிக்கன் தந்தூரியையும் ஆர்டர் செய்தேன். கட்டணம் செலுத்தும் படி நிலைக்கு வந்து பார்த்தால் 50% தள்ளுபடிக்காந கூப்பன் இருந்தது. உடனடியாக அதை உபயோகித்துக் கொண்டேன். அதனால் வெறும் 240 ரூபாய்க்கே மட்டன் பிரியாணியும் சிக்கன் தந்தூரியும் கிடைத்தது.

இதனால் நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால்?

உங்கள் வாழ்வில் ஏதேனும் கைவிட்டு போனாலும் யாரேனும் கழட்டிவிட்டு போனாலும் வருந்தி நிற்காதீர்கள். இந்த வாழ்வு உங்களுக்கு எப்போதும் மிகச்சிறந்த ஒன்றையே பரிசளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

#சாப்பாட்டு_நேரத்தில்_உதிக்கும்_சாப்டான_சிந்தனைகள் 

ஒரு எட்டுப்போய் பாக்கனும்

நான் பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏறினேன். டிக்கேட் எடுப்பதற்காக நடத்துனரின் குரல் வந்த திசையை நோக்கி கையை நீட்டினேன். அப்போது, என் கை அருகில் நின்றுகொண்டிருந்த அம்மாவின் மீது பட்டுவிட்டது. திரும்பி என்னைப் பார்த்ததும்,

"இங்கெ கொடுப்பா நானே எடுத்துத்தாறேன்" என சொல்லி காசைவாங்கி டிக்கேட் எடுத்துக்கொடுத்தாங்க.

லாஜிக்கில்லா சாபங்கள்

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வகுப்பெடுக்க கணினியை எடுத்துக்கொண்டு பணியாளர் அறையில் தயாராகிக் கொண்டிருந்தேன். 2 பத்தாம் வகுப்பு மாணவர்கள் பேம் பேம் என வாயில் ஹாரன் அடித்தபடி அறைக்குள் நுழைந்தனர். இன்னக்கி சயின்ஸ் சார் லீவுய்யா. அதனால எங்களுக்கு இப்ப  ஃப்ரீ பிரீடுய்யா. வாங்க போவோம் நம்ம கிளாசுக்கு என்று அழைத்தனர்.

எனக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு கிளாஸ் இருக்கு என்றேன். ப்ளீஸ் வாங்கய்யா! இல்லாட்டி மேக்ஸ் டீச்சர் வந்துருவாங்க.

எனக்கு வகுப்பில்லாட்டி வந்துருவேன். ஆனா எனக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு கிளாஸ் இருக்கு. நீங்க போங்க. ஐயா எங்க நெலமையக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. மேக்ஸ் டீச்சர் வந்துருவாங்கைய்யா. இன்னைக்கி மட்டும் வாங்கையா. என்று அவர்கள் சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஒழுங்கா இப்ப போங்க. இல்லாட்டி நாளைக்கி நான் லீவு போட்டுருவேன் என்றதும்,

சரி போங்கய்யா. நீங்க நல்லாருங்கைய்யா! என்று சாபம் விட்டுவிட்டு வெளியேறினர்.

இந்தக் கால மாணவர்கள் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். மேக்ஸ் டீச்சர் வகுப்பெடுப்பதற்கெல்லாம் தமிழ் வாத்தியாருக்கு சாபம் விடுகிறார்கள் சை.

#வாத்தியார்_பரிதாபங்கள்


கவுச்சிக் கதைகள்

நான் கூடுதலாக பத்தாம் வகுப்புக்கும் தமிழ் பாடம் எடுத்து வருகிறேன். ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவர்களோடு வகுப்பில் உரையாடிக் கொண்டிருக்கையில், ஒரு மாணவன் கேட்டான். எப்படி ஐயா பஸ் ஸ்டாண்டில் கரெக்டா இறங்குவீங்க? பஸ் ஸ்டாண்ட் போனதுமே பஸ்சை நிப்பாட்டிப்போட்றுவாங்கள்ளடா? அதை வச்சு இறங்கிடுவேன் என்றேன்.

இப்போது இன்னொருவநும் சேர்ந்து கொண்டான். பஸ் பிரேக் டவுனாகி பாதில

வாத்தியார் வார்த்தையை தட்டாத மாணவர்கள்

ஒரு கொஸ்டிநையும் விடாம எல்லா கொஸ்டிநையும் அட்டென்ட் பண்ணுங்கந்னு சொன்னதுக்காக,

சாய்ஸ் கொஸ்டின் உட்பட கொஸ்டின் பேப்பர்ல உள்ள எல்லா கொஸ்டிநையும் அட்டென்ட் பண்ணி வச்சுருக்காங்கெ.

நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடா! 

டௌட்டா அழயிறேன்

12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் நான்கு நாட்களாக ஹாய் என்று மட்டும் வாட்சாப்பில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாந். எனக்கோ கடுப்பு வந்துவிட்டது.

"நா ஒனக்கு வாத்தியாரு. ஒரு மட்டுமரியாத வேண்டாமா? வெறுமனே ஹாய்ந்னு மட்டும் மெசேஜ் அனுப்புற? சார்ந்னு சேத்து அனுப்புனா நீங்க கொறஞ்சுபோய்ருவீங்களோ?" என மெசேஜ் தட்டிவிட்டேன்.

"மன்நுச்சுக்கங்கயா, அப்படியெல்லாம் நான் நெனப்பநாயா? சாருக்கு ஸ்பெல்லிங் தெரியல அதனாலதாயா அனுப்பல." என வாய்ஸ் நோட் அனுப்புறாந்.

தொடக்கத்துல கடுப்புல இருந்த நான் இப்போ, அவன் உண்மையச் சொல்றானா பொய்யச் சொல்றானா எனத் தெரியாம டௌட்டில் திரியிறேன். நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்கேபோல!

 

#எனக்கு_வாய்த்த_நல்_மாணாக்கர்கள் 

கேட்டாளுகளே ஒரு கேள்வி

ஸ்டாப் ரூமில் அமர்ந்திருந்தேன். அந்தப் பக்கமாக வந்த இரண்டு ஆறாம் வகுப்புச் சிறுமிகள், கதவருகே நின்று தங்களுக்குள் ரகசியமாகப் பேசத் தொடங்கினர்.

" சார் ஒக்காந்து இருக்காருள. குட்மார்னிங் சொல்லுவோமாசார் வணக்கம்தான் சொல்லுவாரு." ஒருவழியாக அவர்களது ரகசியப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, வணக்கம் சொல்லினர்.

" சார் கம்ப்யூட்டர் பாக்குறாரு" என மீண்டும் தங்களது ரகசிய சம்பாஷணைக்குள் சென்றனர்.

அந்தக் குழந்தைகள் ரகசியமாகத்தான் பேசுகிறோம் என நினைத்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பேசுவது எனக்கு துல்லியமாகக் கேட்டது. குழந்தைகள் ரகசியம் பேசுவது தான் எத்தனை அழகு என ரசித்துக் கொண்டிருந்தேன்.

அவர்களது உரையாடலில் "சாருக்குக் கல்யாணமாயிருச்சான்னு கேளுள?" என்ற வினா வந்ததும், என்ன என கேட்டு திரும்பினேன். "போச்சு சாருக்கு கேட்டுருச்சுள" என சொல்லிக்கொண்டே இரண்டு சிறுமிகளும் குடுகுடுவென ஓடிவிட்டனர்.

சிங்கி களாய் இருக்கும் 90's கிட்ஸ்சுகளை, " இந்த வாக்கியத்தில் சிங்கில்கள் என்ற  முன்னொட்டெல்லாம் எதற்கு? 90's கிட்ஸ் என எழுதினாலே உங்களுக்குப் புரியும்".   டொண்டி டென் கிட்ஸ்கள் கூட கேலி செய்கின்றனவே! இந்நிலைமையை காணும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.

 

#ஸ்டாப்_ரூம்_அப்டேட் 

நான் எடுத்த ஆயுதம்

இன்று எங்களது பள்ளியில் சைக்கிள் கொடுப்பதற்காக மாணவர்களை 8.30ற்கே  தலைமையாசிரியை வரச் சொல்லியிருந்தார். அவர்கள் 8 மணிக்கே ஆஜராகி விட்டனர்.

மணி 8 முப்பதைக் கடந்ததும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து, ஸ்டாப் ரூமில் இருந்த என்னிடம்,  டீச்சருங்கெல்லாம் எப்ப சார் வருவாங்க? எனக் கேட்டுக்கொண்டிருந்தனர்.  கொஞ்ச நேரத்தில்  வந்துடுவாங்க, என ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

மணி 8.35 ஆனது, மீண்டும் அதே வினாவை ஒவ்வொருவராக கேட்டு ஸ்டாப் ரூம் பக்கம் வரத் தொடங்கினர்.

8.40 மணிக்கு கொத்தாய் மொத்தமாக மாணவர்கள் வந்து,  அதே வினாவைக் கேட்டனர்.  இம்முறை நான், அவர்களிடம் தமிழ் பரிட்சை எப்போ? நாலாம் தேதி ஐயா என்றனர். திங்கட்கிழமை காலைல எட்டரைக்கு தமிழ் ஸ்டெடி. எல்லாரும் வந்துடனும் என்றேன். மாணவர்கள் கோரசாக நன்றி ஐயா! எனச்சொல்லி விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு ஒரு பய கூட ஸ்டாப் ரூம் பக்கம் எட்டிப் பாக்கல. 

நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை  எதிரே உள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள்!


பதிவு எழுதப்பட்ட நாள் 29-02-2020