இங்கே துலாவு

சனி, 22 மே, 2021

என் வாழ்வில் 2020 கடந்ததும் நடந்ததும்:

கொஞ்சம் பெரிய பதிவு. அத்தனை முக்கியமானதுமில்லை. எனவே விரும்புபவர்கள் படிக்கலாம். மற்றவர்கள் கடந்து செல்லலாம்.

இப்போதெல்லாம் காலம் விரைவாக உருண்டோடுவதால், ஓராண்டு என்பது மிகக் குறுகிய காலமாகத் தெரிகிறது. அதனால், கடந்தாண்டு நிகழ்வு கூட நடப்பு ஆண்டில் நிகழ்ந்ததாக தோற்ற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனவே நடந்தவற்றை எழுதி வைத்துக்கொண்டால் நாள பின்ன எனக்கு உதவலாம் என்பதால் எழுதுகிறேன். முகநூல் வழக்கப்படி இதுபோன்ற பதிவுகள் டிசம்பர் இறுதியில்தான் பதிவிட வேண்டும் என்பது விதி. ஊர் கட்டுப்பாட்டை மீறியதற்காக என்னை பொறுத்துக் கொள்க.

முகநூல் கணக்கு:

2020 பிப்ரவரியில் பாரா ஒலிம்பிக்கிற்கு செல்லவிருக்கும் பார்வைமாற்றுத்திறனாளி ஜூடோ வீரருக்கு  பண உதவி வேண்டி ஒரு பதிவை முகநூலில் இட்டிருந்தேன். அவருக்கு உதவி கிடைக்க அப்பதிவு உதவியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் வியாபாரம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் கிடைக்க பாலமாக என் முகநூல் கணக்கு இருந்தது.

தேசிய கல்விக் கொள்கை வரைவை விழியன் குழுவினர் தமிழில் மொழிபெயர்த்த பொழுது, அம் மொழி பெயர்ப்பை பார்வை மாற்றுத் திறனாளிகளும் படிக்கும் வகையில் வேக் கோப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத் தருவதற்கு இந்த முகநூல் கணக்கே உதவியது.

அதுதவிர முகநூல் வழியாக சில மாற்றுத்திறனாளிகள் ஐயங்களையும் கேட்டிருக்கின்றனர். எனக்குத் தெரிந்தவற்றை சொல்லியிருக்கிறேன். தெரியாதவற்றிற்கு, சரியான துறை வல்லுனர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

2019 வரை முகநூலில் இருந்த வெட்டி கணக்கு 2020 வெற்றி கணக்காக மாறியது. கொஞ்சம் மொக்கையா தான் இருக்கு பஞ்ச்.

ஆசுவாசம்:

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இருக்கும் முதல் பிரச்சனை பொருளீட்ட விரைவாக ஒரு வேலையைத் தேடுவதுதான். அப்போது எனக்கு கணினி பற்றி எதுவும் தெரியாததால் வங்கி மற்றும் அலுவலகப் பணிகளை விடுத்து ஆசிரியராவது என முடிவு செய்தேன். அதற்காக 2014 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சி பெற்ற கையோடு சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் அழைக்கப்பட்டேன். அந்த ஆண்டில் அரசின் குளறுபடியால் 50க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் பணி வாய்ப்பை பெற இயலாது தவித்தனர். அவர்களில் நானும் ஒருவன். அதைப் பற்றி விரிவாக இன்னொரு நாளில் எழுதுகிறேன்.

பணிவாய்ப்பு கிட்டாததால் படிப்பை தொடர்ந்தேன். அது மட்டும்தான் என்னிடமிருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. தமிழகத்தில் உயர்கல்வி வரை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசக் கல்வி என்பதால், குடும்பத்திடம் கையேந்தாமல் படிக்கமுடிந்தது. படித்துக் கொண்டே பணிக்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதுமட்டுமல்லாமல் புதியவற்றை கற்றுக்கொண்டு நான் என்னை வலுப்படுத்திக் கொண்டேன். இருந்தாலும் மிகுந்த மன அழுத்தங்களோடே காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தேன். 2020இல்தான் அதற்கு ஒரு விடிவு கிடைத்தது. ஆம் 2020இல் எனக்கு அரசுப் பணி கிடைத்தது! நீண்ட நேரம் தண்ணீருக்குள் வைத்து நம் தலையை அழுத்திக்கொண்டிருந்த கைகள் திடீரென விட்டுச் சென்றால் எத்தனை ஆசுவாசமாக உணர்வோமோ அத்தகைய உணர்வுதான் எனக்கு அப்போது ஏற்பட்டது.

பரவசமடைந்த தருணங்கள்:

எங்கள் கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கூரை வீடுகளில்  எங்கள் வீடும் ஒன்று. 2020ல் தான் நல்ல வீடொன்றைக் கட்டத் தொடங்கினோம். ஒவ்வொரு பகுதியும் கட்ட கட்ட அதை தொட்டுப்பார்த்து ரசித்ததெல்லாம், ஒரு பார்வையற்றவராக பரவசமடைந்த தருணங்கள் அவை.

புதிய வாய்ப்பு:

பெரும்பாலான பார்வையற்றோருக்கு கல்விக்காக பல ஆண்டுகள் விடுதி வாழ்க்கையிலும், பிறகு பணியிட சூழலிலும் கழிந்துவிடும். சொந்த ஊரில் ஆண்டு முழுவதும் இருக்கும் வாய்ப்பு இறுதிவரை ஏற்படாமலே போய்விடும். கொரோனா ஊரடங்காதது பார்வை மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அத்தகைய வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த வாய்ப்பு ஒரு தரப்பினருக்கு துயரையும் ஒரு தரப்பினருக்கு மகிழ்வையும் தந்திருக்கும்.

என் வாழ்வில் இருபதிற்கும் மேற்பட்ட ஆண்டுகள் விடுதியிலேயே கழிந்துவிட்டன. 2020இல் தான் வீட்டிலேயே தங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் மர நிழல்கள் எந்த திசையில் விழுகின்றன, ஒவ்வொரு பருவத்திலும் கத்தக்கூடிய புதிய புதிய பறவைகளின் ஒலி  என குழந்தையைப்போல அனைத்தையும் உணர்ந்து ரசித்தேன்

கொஞ்சம் ஓவரு:

2020 சென்னை புத்தக காட்சியில் பிங்க் நிறக் கடல் கவிதை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பை தன சக்தி மேடம் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். அந்நிகழ்விற்கு சர்மிளாசயித்  மேடம் வந்திருந்தார்கள். இப்படித்தான் 2020 புத்தகத்தோடு பயணங்கள் தொடங்கியது.

அமேசானில் வெளியிட்ட 2 புத்தகங்களுக்கான ராயல்டி 2020பிப்ரவரிஇலிருந்து வரத்தொடங்கியது. ராயல்டியாக இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்திருக்கிறது. நம்ம எழுத்துக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.

விளையாட்டு

2021 ஆம் ஆண்டு நாகேஷ் கோப்பைக்கான தமிழ்நாடு பார்வையற்றோருக்கான  கிரிக்கெட் அணியில் தெரிவாகி இருந்தேன். பணிக்குச் செல்ல வேண்டி இருப்பதால் அதிலிருந்து நான் விலகிக்க் கொண்டேன். இன்னும் பார்மில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விரல்மொழியர் மின்னிதழில் விளையாட்டுச் சிறப்பிதழ் வெளிக்கொண்டுவர எடுத்த முயற்சிகள் வெற்றியில் முடிந்தது.

2020ல் அதிகம் பேர் படித்த விரல்மொழியர் இதழ்களுள்  விளையாட்டுச் சிறப்பிதழ் முதலிடம் பிடித்தது மன நிறைவே.

தொழில்நுட்பம்

2020இல் ஆடியோ எடிட்டிங்கில் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன். சர்வதேச அணுகல்  தன்மை விழிப்புணர்வு நாளன்று இந்திய பார்வையற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு, என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர்.  அதில் ஊடகத்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் எனும் தலைப்பில் பேசினேன்.

சோகா இகேதா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மின்னூல் தொடர்பான தேசிய பயிலரங்கில் கருத்தாளராக இரண்டு நாட்கள் மின்நூல் பயன்பாடு உருவாக்கம் குறித்து பேசினேன். தேசிய பயிலரங்காக இருந்தாலும் பன்நாட்டைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். பார்வையுள்ளவர்களுக்கும் புரியும் வகையில் ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கை  என்னாலும் எடுக்க முடியும் என அந்நிகழ்வு உணர்த்தியது.

கண்ட கண்ட ஜூம் அரங்கு பக்கமெல்லாம் தலை வைக்காமல், தேர்வுசெய்து ஜூம் அரங்குகளில் கலந்து கொண்டதால் ஜூம் பொழுதுகள் எனக்கு கலகலப்பாகவே இருந்தன.

பறிபோன வாய்ப்புகள்:

சிட்சபேசன் அவர்களது பட்டிமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. பட்டிமன்றத்துக்கு முந்தைய நாள் இரவு, விட்டத்திலிருந்த  இருப்புச் சட்டியை பூனை தள்ளிவிட்டது. அது என் முகத்தில் விழுந்து உதட்டை வெட்டியதால் பேசும் வாய்ப்பு பறிபோனது.

கூரை வீடாக இருப்பதால் மழை பெய்யும் நேரத்தில் அனைவருமே வீட்டிற்குள் ஒன்றாய் அமர்ந்திருப்போம். இதன் காரணமாக சிறப்பு அழைப்பாளராக பேச அழைத்த சில நிகழ்வுகளில் பேச இயலாமல் போயிருக்கிறது.

மிகப்பெரிய தவறு

வேலை கிடைத்த அடுத்த மாதத்திலிருந்தே வழக்கமான பார்வையற்றோரின் பெற்றோரைப் போல பார்வை உள்ள பெண்ணைத் தான் கட்டி வைப்பேன் என்ற நோக்கில் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கிவிட்டனர். அந்தப் பாதை எங்கே செல்லும் எனத் தெரிந்ததால் 2021 வரை மட்டுமே அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்திருக்கிறேன். பார்வையற்றோர் குறித்து புரிதலில்லாத சமூகம், அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமண சந்தை இவற்றுக்கிடையே அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என பார்ப்போம்.

இப்போதுதான் புரிய வருகிறது மக்களே அரேஞ்ச் மேரேஜ் நம்பி அமைதியாக இருந்தது மிகப்பெரிய தவறென. “கணக்குப் பாடம் போல் கடைசி வரை புரியாமல் இருந்துவிட்டால் ஒரு துயருமில்லை. ஆனால் காலம் கடந்து புரியவரும் விஷயங்கள்தான் கூடுதல் கண்ணீரை வரவழைத்துவிடுகின்றன.”

நோட் பண்ணுங்கப்பா.

எதிர்பார்ப்பு

வழக்கமான 90ஸ் கிட்ஸ் இன் எதிர்பார்ப்புதான். இந்த ஆண்டாவது நமக்கு கல்யாணம் நடக்குமா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக