இங்கே துலாவு

வியாழன், 31 ஜனவரி, 2019

சிறுவாட்டுக் காசு

பார்வையற்றோருக்கான நாகேஷ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில், இந்தியாவின் நம்பரொன் அணியான ஆந்திராவிற்கும், ஐந்தாம் இடத்தை பெற்றிருக்கும் தமிழக அணிக்குமிடையிலான காலிறுதிப் போட்டி, பிப்ரவரி 2 சனிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக விசாகப்பட்டினத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியாச்சு.
இந்த நேரத்துல ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க.
எனது ஒன்பதாம் வகுப்பில் இருந்து மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்காக வீட்டில் அனுமதி கேட்பேன். இங்கே அனுமதி என்பது, போட்டிகளுக்குச்  செல்வதற்காக பணம் கேட்பதையே குறிக்கும்.  உடனடியாக அப்பா: கையில சுத்தமா காசு இல்ல. அடுத்தவாட்டி போய்க்கலாம், என்பார். சிறிது நேரம் கழித்து அம்மா பக்கத்து வீட்டுக்கு செந்று, கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து: "இந்தாடா  எரநூரு ரூபா. பாமாகிட்ட கெஞ்சி கூத்தாடி கடன் வாங்கிட்டு வந்தே"  எனச் சொல்லி அப்பா முன்னாடி என் கையில் கொடுப்பாங்க. ஆனா எனக்கு நல்லாவே தெரியும், அது அப்பாவுக்கு தெரியாம சேர்த்து வச்ச சிறுவாட்டு காசுன்னு. இதே உத்தியை தான் எங்கள் ஊரில் பல பெண்களும் கடைபிடித்தனர்.
"இங்கெரெடி மாரியம்மா! ஏ மைய பள்ளிக்கூடத்துல மருதக்கிடூருக்கு கூட்டிப் போராகலாம். நூரூவா வேணுமுன்னு கேட்டு, மொகத்த  தூக்கி வச்சுக்கிட்டு ஒக்காந்திருந்தாந். செரின்னு நூரூவா கொடுத்துவிட்டேன். அந்த ஆளுகிட்ட, ஒனக்கிட்ட தான் கடவாங்குனதா சொல்லிருக்கேன். வந்து கேட்டா ஆமான்னு சொல்லிரு."
இப்படி சிறுவாட்டு காசு  வழியாகத்தான்,  அம்மாக்கள் தங்கள் மகன்களின் கனவுகளையும்,  ஆசைகளையும் நிறைவேற்றினர்.

திங்கள், 21 ஜனவரி, 2019

என்னை எனக்கே தெரியாது


மதுரையில் படிக்கும்வரை எந்நேரமும் மைதானத்தில்தான் கிடப்பேன். மதுரையை விட்டு வந்த பிறகு, tournament இல் மட்டும் தான் மைதானங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்முறை ஒரு வாரம் தொடர்ச்சியாக மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

என்னசெய்வதாய் உத்தேசம்

நம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்
எப்படி இருக்கீங்க அண்ணா?
என வாஞ்சையுடன் விசாரித்தாய்...
உன் குழந்தை
சாக்லேட் கேட்டு அடம்பிடித்து
அழுது கொண்டிருந்தது...
நீ தங்கையாக மாறிக்கொண்டு;
என்னை அண்ணனாக மாற்றிவிட்டாய்...
நலம் விசாரிப்புகளில்
துருத்திக்கொண்டு தெரியும்
என்மீதான;
மாறாத உன் காதலை
என்ன செய்வதாய் உத்தேசம்???