இங்கே துலாவு

திங்கள், 31 மே, 2021

முட்டாப் புலவன்

அன்று பேருந்தில் இறங்கி எனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். எங்கள் ஊர் கிராமப்புறம் என்பதால் இங்கே ஒத்தையடிப்பாதைகள்தான் அதிகம். எனது வீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவன் திடீரென வழியைத் தவறவிட்டு விட்டேன். வழியைக் கண்டுபிடிக்க முயன்ற போது, ஒரு முள்ளுப் பத்தைக்குள் மாட்டிக்கொண்டேன். முட்கள் இழுத்து சட்டையும் லேசாகக் கிழிந்துவிட்டது. பிறகு ஒரு வழியாக பாதையைக் கண்டுபிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.


மறு நாள் பக்கத்து வீட்டு அம்மா வந்து என் அம்மாவிடம், “நேத்து நான் அஙுனைக்கிலதான் மாடு மேச்சுக்கிட்டு இருந்தேன். நான் பார்த்துகிட்டே இருக்கேன் தம்பி முள்ளுப் பத்தைக்கிள போயி மாட்டிகிச்சு. சட்ட கூட லைட்டா கிழிஞ்சு போச்சு. தம்பி இப்ப நல்லா இருக்கா.” என கேட்டதுதான் தாமதம், “அக்கா நீ வாய தொறந்து இந்தப்பக்கம் போன்னு சொல்லிருந்தா, அவன் முள்ளுப் பத்தைக்கிள போயிருப்பானா? நீ பார்த்துகிட்டே இருந்தேன்னு வந்து என்கிட்டயே சொல்லுற. நீ எல்லாம் மனுஷியா?” என வசமாக வாங்கு வாங்குன்னு எங்கம்மா வாங்கி விட்டாங்க.


உலக ஜனத்தொகை 700 கோடி, அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 20 கோடி, பிற மாற்றுத்திறனாளிகள் என்பது கோடி என தோராயமாக வைத்துக்கொள்வோம். மிச்சமிருக்கும் 600 கோடி பேர் சின்ன சின்ன உதவிகள் செய்தாலே போதும், பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் பொது வெளியில் நடமாட முடியும். ஆனால் இங்கே அப்படி நடப்பதில்லை. மிகக் குறைவானவர்களே உதவுகின்றனர்.


பார்வை மாற்றுத்திறனாளிகள் பலரும் இதை அனுபவித்திருக்கலாம். நாம் நடந்து செல்லும் வழியில் கம்பியோ, மின்கம்பமோ 

இருக்கும். அதில் நாம் மோதிவிடுவோம் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஐயோ பாவம் எனச் சொல்லிவிட்டு நம்மைக் கடந்து செல்வார். ஆனால் அவர் வாய் திறந்து கொஞ்சம் இடது புறமோ வலது புறமோ தள்ளிச் செல்லுங்கள் என்று சொல்லி இருந்தால், நிச்சயமாக நாம் மோதுவதிலிருந்து  தப்பித்திருக்கலாம்.

ஒரு பேருந்தில் 20 பேர் 30 பேருக்கு மேல் இருப்பார்கள். நான் போய் இந்த பேருந்து திண்டுக்கல் போகுமா எனக்கேட்டால், ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். பின் வாசல் படியில் இருந்து கேட்டு பார்ப்பேன், இந்தப் பக்கம் ஆளில்லை என்று முன் வாசப்படி பக்கம் சென்று கேட்டுப் பார்ப்பேன். ஆனால் ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். இன்னொரு விடயம், பேருந்தில் நின்று கொண்டே வருவேன், பேருந்தில் இருக்கைகள் காலியாகிக்  கொண்டே வரும். ஆனால் ஒருவரும் இங்கே இருக்கை இருக்கிறது வந்து அமருங்கள் எனச் சொல்லமாட்டார்கள். அதேசமயம் இறங்கும்போது, “பாவம் அந்த தம்பி நின்னுகிட்டே வந்துச்சு. பக்கத்துலதான் சீட்டு இருந்துச்சு.” என என் காதில் விழும்படி சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இது போன்றவர்கள் இன்று மட்டுமல்ல, வரலாற்றில் அன்றும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு உரிய எழுத்துப்பூர்வ சான்றும் இருக்கிறது.


பார்வை உள்ளவர்கள் அன்றாடம் காக்கை, குருவி, கிளி, என பல பறவைகளையும், இன்னும் பல விலங்குகளையும், தாவரங்களையும் கண்களால் பார்த்து எளிதில் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லாது போகிறது. எனவே அவர்கள் சத்தங்களின் வழியே அல்லது சொற்களின் வழியே மட்டுமே அவற்றை தரிசிக்கிறார்கள். தாங்கள் அன்றாடம் பார்த்து ரசிப்பவற்றுள் சிலவற்றையாவது, என்றாவது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தொட்டுக் காட்ட வேண்டுமென பார்வை உள்ளவர்கள் நினைத்திருப்பார்களா? எத்தனை பேருக்கு அத்தகைய 

எண்ணம் தோன்றி இருக்கும் என எனக்குத் தெரியாது ஆனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் சிலர் ஒரு பொருளை தங்கள் 

வாழ்க்கையிலேயே முதல் முறையாக தொட்டுப் பார்த்து புரிந்து கொள்ள 

முயற்சிக்கிறார்கள். அதைப் பற்றிய உரையாடலை இன்னும் இங்கே முட்டாள்தனத்திற்கு உவமையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.


எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான். 

நான்கு பார்வையற்றவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே முதன்முறையாக ஒரு யானையைத் தொட்டுப்பார்க்கிறார்கள். அதில், காதைத் தொட்டுப்பார்த்தவன் யானை முறம் போல் இருக்கிறதென்றும், காலை தொட்டுப்பார்த்தவன் யானை தூண் போல் இருக்கிறதென்றும், வயிறைத் தொட்டுப்பார்த்தவன் யானை  பானை போல் இருக்கிறதென்றும், வாலைத் தொட்டுப்பார்த்தவன் யானை  கயிறு போல் இருக்கிறதென்றும் சொன்னானாம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பார்வை உள்ளவர், “இவங்கெ சரியான முட்டாள் பயலுக போல” என அறிவற்றவர்களுக்கு இதையே 

உவமையாக எழுதிவிட்டார். அதையே இன்றைய எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.


ஒரு பார்வையற்றவரிடம் ஒரு பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர் எத்தனை நுணுக்கமாக தொட்டுப் பார்ப்பார் என்று உங்களுக்கு அப்போது  புரியும். இக்கதையில் வரும் ஒவ்வொரு பார்வையற்றவரும், ஏன் காதைத் தாண்டி கையைக் கொண்டு செல்லவில்லை, காலைத் தாண்டி ஏன் கையைக் கொண்டு செல்லவில்லை என்று தெரியவில்லை? இது போன்ற லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை விட்டுவிடுவோம். 

பார்வையற்றவர்கள் அன்றுதான் முதல்முறையாக யானையைத் தொட்டுப்  பார்க்கிறார்கள். உடனே அந்த பார்வை உள்ளவர் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை இடைமறித்து, யானை என்றால் இப்படித்தான் இருக்கும் என அவர்களுக்கு முழுமையாக விளக்கி இருக்கவேண்டும். ஆனால், அதை விடுத்து அவர்கள் தொட்டுப்பார்த்து பேசிக்கொண்டிருந்ததை முட்டாள்த்தனத்திற்கு உவமையாக ஏட்டில் வந்து எழுதிவிட்டார். 


நான் முதலில் சொன்னேன் அல்லவா, நான் முள்ளுப் பத்தைக்குள் போய் விழுவதை பார்த்துக் கொண்டிருந்த அந்த அம்மாவிற்கும், இந்த புலவனுக்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை. இந்த கதை என் அம்மாவிற்குத் தெரியாது. இந்த கதை தெரிந்திருந்தால். நிச்சயமாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு  அவ்வாறு எழுதிய புலவனை,

 “என்ன முட்டாப் பய நீ. அந்தப் புள்ளைக இன்னக்கிதான் மொதமொதலா யானைய பாக்குதுங்க. அதுக கிட்ட இப்படித்தான் யான இருக்குமுன்னு  நீ தொட்டு காட்டாம. அதுக பேசிகிட்டு இருந்தத ஊரு ஃபுல்லா பரப்பிவிட்டுருக்க. நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா?” என்றுதான் திட்டிருப்பார்.

 

6 கருத்துகள்:

  1. முட்டாப் புலவன் மிகவும் அருமை இன்றைய எதார்த்தம் கடந்த கால கதையோடு தொடர்புபடுத்திக் கூறிய விதம் மிக மிக அருமை கூறப்பட்டவை அனைத்தும் நடைமுறையில் நிகழும் எதார்த்தம்

    பதிலளிநீக்கு
  2. Hello brother...Nan ungalin pathivugal anaithayum padithen. Migaum arumayagaum karpanaithiran nirainthum irunthathu. Kurippaga "Naan edutha ayutham "," Ketaluga oru kelvi" migavum arumaiyaga irunthathu.. Neenga pathivittula anaithum ungalin vazhvil nigazhntha unmai sambavathaye suttikattugirathu.. Ungalai pondravargalin vazhvil neengal ethirparamal sila visayangal nadanthukondrukirathu.. Ovoru kathaiku pinnalum meisilirka vaikindra mudivugal irunthathai nan unarnthen.... Ithu pondra pala kathagal mattumindri melum pala sathanaigalai puriya naan vaazhthugiren.. Inimel en vazhvil ennal mudinthavrailum ungalai pondravargaluku udhavi seiven.. Nandri Vanakkam..

    பதிலளிநீக்கு
  3. சாட்டையடிப் பதிவு. கண்கள் இருந்தும் காணத் தெரியாதவர்களின் நானும் ஒருவன் என்கின்ற உண்மை என்னை உலுக்கியது. உங்கள் வழியாக உலகைக் காண கற்றுத்தந்தமைக்கு நன்றி. இனி கவனமாக இருப்பேன்.

    பதிலளிநீக்கு