இங்கே துலாவு

சனி, 22 மே, 2021

கவுச்சிக் கதைகள்

நான் கூடுதலாக பத்தாம் வகுப்புக்கும் தமிழ் பாடம் எடுத்து வருகிறேன். ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவர்களோடு வகுப்பில் உரையாடிக் கொண்டிருக்கையில், ஒரு மாணவன் கேட்டான். எப்படி ஐயா பஸ் ஸ்டாண்டில் கரெக்டா இறங்குவீங்க? பஸ் ஸ்டாண்ட் போனதுமே பஸ்சை நிப்பாட்டிப்போட்றுவாங்கள்ளடா? அதை வச்சு இறங்கிடுவேன் என்றேன்.

இப்போது இன்னொருவநும் சேர்ந்து கொண்டான். பஸ் பிரேக் டவுனாகி பாதில

நிக்கவும் வாய்ப்பு இருக்குல்லயா? நீங்க குளம்பவும் வாய்ப்பு இருக்குல்ல எனக் கேட்டான்.

இரண்டாவதாய் கேட்டவநிடம், மொத கொஸ்டின் ஒன்னோடதுதானே? அத அவநுட்டச் சொல்லிக் கேட்கச் சொல்லி இருக்கே என்றதும், எப்படிய்யா கரெக்டா கண்டுபிடிச்சீங்க?

மாணவர்கள் இதுபோன்ற வினாக்களை, பக்கத்தில் இருக்கும் மாணவனிடம் சொல்லித்தான் கேட்கச் சொல்வர். அந்த வினாவிற்கு ஆசிரியர் மகிழ்ச்சியாய் பதிலளிக்கத் தொடங்கினாள், வினாவிற்கு சொந்தக்காரன் வந்து இணைந்துகொள்வான். ஆசிரியர் கோபப்பட்டுத் திட்டத் தொடங்கினால் வினாவிற்கு சொந்தக்காரன் கமுக்கமாக இருந்துகொள்வான். இதுதான் எல்லா காலத்திய மாணவ சமுதாய நடைமுறை என்பதை அவனிடம் நான் சொல்லவில்லை.

கூகுள் மேப்பைப் பார்த்து இறங்கிக் கொள்வேன் என்றேன். அவன் அந்த பதிலைக் கேட்டதும் சமாதானமாகிவிட்டான். அந்த நேரத்துல, டேட்டா தீர்ந்து போச்சுன்னா என்ன செய்வீங்க? சார்ஜ் இல்லாம போச்சுன்னா என்ன செய்வீங்க? செல்ல பிட்பாக்கெட் அடிச்சுட்டாங்கந்னா  என்ன செய்வீங்க? போன்ற வினாக்களை கேட்காமல் விட்டானே என நானும் ஆறுதல் அடைந்தேன்.

மாணவர்கள் இதுபோன்ற தொடர் வினாக்களை கேட்கக் கூடியவர்கள்தான். ஏனெனில் கீழ் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஆசிரியரோடு கூடுதல் நெருக்கத்தை காட்டுவார்கள். கொஞ்சம் கூடுதலாகவே பேசுவார்கள். அவர்கள் மேல் வகுப்புகள் செல்லச்செல்ல, வளர்ந்த மகளுக்கும் தகப்பனுக்கும் இடையிலான இடைவெளி போல, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் ஒரு கோடு வந்துவிடுகிறது.

பார்வையற்றவர்கள் பொதுவாகவே வேகத்தடைகள் வளைவுகள் இது போன்ற பலவற்றை கொண்டு பேருந்து நிறுத்தங்களை அடையாளம் கண்டு கொள்வோம். இன்று கூகுள் மேப்பை அடிப்படையாகக்கொண்டு சாலை வழித்தடங்களைக் காட்டும் சில செயலிகள்கூட வந்திருக்கின்றன. அவை பெருநகரங்களில் 80 சதவீத துல்லியத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. கிராமப்புறங்களில் அதை சுத்தமாகவே நம்ப முடியாது. இன்று பார்வையற்றவர்கள் பேருந்தில் அடிக்கடி செல்லை எடுத்து பார்ப்பது அத்தனை உத்தமம் இல்லை. ஏனெனில் திருடர்கள் செல்லை லவட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். இப்போதெல்லாம் திருடர்கள் பார்வையற்றவரா என்றெல்லாம் பார்ப்பதில்லை செல்லை மட்டுமே பார்க்கிறார்கள். எனவே பார்வையற்றவர்கள் மேலே குறிப்பிட்ட மரபான வழிமுறைகளையே பின்பற்றுகிறோம்.

பஸ்ஸ்டாண்டை அடையாளம் கண்டுகொள்ள ஒரு புதிய ஐட்டம் இருக்கிறது. அதுதான் மூத்திரக் கவுச்சி!!! மூத்திர வாடை உக்கிரமாய் நாசிக்குள் நுழையத் தொடங்கிவிட்டாலே பேருந்து நிலையம் வந்துவிட்டது என்று அர்த்தம். எங்கள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை எடுத்துக்கொண்டால், மூன்று புறம் கழிவறைகளாலும் ஒரு புறம் மெயின் ரோட்டாளும் ஆனது. நான் அடிக்கடி செல்லும் அறந்தாங்கி பேருந்து நிலையம் ஒரு நேர்கோடு போன்றது. அதன் ஒருமுனை தொடங்கி அடுத்த முனை வரை நம்மவர்கள்  கழிவறையாகவே பயன்படுத்துகின்றனர். இப் பேருந்து நிலையங்களில் எப் பக்கத்திலிருந்தும் பேருந்து நுழைந்தாலும், மூத்திரக் கவுச்சி பேருந்து நிலையம் வந்துவிட்டது என்பதை அறிவித்து விடும்.

சில பேருந்து நிலையங்களில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் மூத்திர வாடை அடிக்கும். நம் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் சரியாக அந்த இடத்தில் நிறுத்தி, மதுர வந்துருச்சு இறங்கு திருச்சி வந்துருச்சு இறங்கு என பயணிகளை இறக்கிவிடுவார்கள். கட்டாயம் புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் வந்ததும் சொல்றேன் எனச் சொன்னவர் வாக்குத் தவறலாம். மூத்திரக் கவுச்சியால் பேருந்து நிலையத்தை அடையாளம் காட்ட என் மூக்குத் தவறியதே இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக