இங்கே துலாவு

வியாழன், 9 மே, 2019

IPL கலாட்டா


   கபில் தேவும் Z குழுமத் தலைவரும் இணைந்து ICL-யை வெற்றிகரமாக நடத்திக் காட்ட, பொறாமையால் இந்திய கிரிக்கெட் சபை இந்த அமைப்புக்கு தடை விதிக்க, ICC உட்பட அனைத்து கிரிக்கெட் சபைகளும் இதற்கு தலையசைக்க IPL-
உருவாக்கியது இந்தியா. ICL  வீரர்கள் IPL விளையாட அனுமதிக்கப்பட்டாலும் தேசிய அணிக் கதவுகள் அவர்களுக்கு மூடியே கிடக்கின்றன.
  தென்னாப்பிரிக்காவில் நடந்த IPL தொடரில் ஒவ்வொரு ஆறு ஓட்டங்களுக்கும் கால் ஊனமுற்றவருக்கு ஒரு சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் 38 6-களை அடித்த கில்கிறிஸ்ட் 60 சைக்கிள்களை தன்னால் பெற்றுத்தர இயலவில்லையே என்று வருந்தினார்.
  இந்த IPL-ல் கெய்ல் அடித்த 6 சிறுமியின் மூக்கைத் தாக்க, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அந்தச்சிறுமி. ஆறுதல் சொல்லப் போன கெய்லிடம், "நம் அணிக்காக அடிக்கும் எத்தனை 6-களையும் தாங்க நான் தயார்" என்றதும், "எங்களை நோக்கி ஒரு 6, எங்களை நோக்கி 6" என ரசிகர்கள் கேட்டதும்  நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், பின் வந்த செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
  தென்னாப்பிரிக்காவில் IPL-ல் 60% போட்டிகள் போட்டி நிர்ணயம் (Match Fixing) மூலம் நடந்தேறியதாக ஓர் அறிக்கை கூறுகிறது. இதே தொடரில் நடந்த நிதி மோசடியால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபை தலைவர் ஜெரால்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  காசை வாங்கிக் கொண்டு போட்டியை விட்டுக்கொடுப்பது போட்டி நிர்ணயம் என்றால், காசை வாங்கிக்கொண்டு ஒரு பந்தை முறையற்ற பந்தாகவோ, அகலப் பந்தாகவோ வீசுவது ஆட்ட நிர்ணயம் (Spot Fixing) எனப்படும்.
  இந்த IPL-ல் அகப்பட்ட ஐவருமே இத்தகைய சதியில் ஈடுபட்டவர்களே. அபினோ பாலி சூதாட்ட தரகராக செயல்பட்டிருக்கிறார். சுதந்திர் மற்றும் ஸ்ரீ வத்ஸவா ஆகியோர் முறையற்ற பந்தை வீச பணம் வாங்கியுள்ளனர். அமித் யாதவ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். மணிந்தர் மிஸ்ரா 1,25,00,000 கருப்புப் பணத்தை அணி நிர்வாகத்திடமிருந்து பெற்றுள்ளார்.
  லூக் பாமஸ் பேஜ் அமெரிக்க பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்டது, மது போதையில் ஷாருக்கான் மைதானம் சென்றது, பானல், ராகுல் சர்மா ஆகியோர் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதால் கைதானது போன்ற குட்டுக்களும் வெளிவந்து கோபத்தைக் கிளப்பின.
  அசார் முகமது பாகிஸ்தான் வீரர் என்பதால் IPL-ல் விளையாட அனுமதிக்கப்படவில்லை. விளையாட பாகிஸ்தானியரை அனுமதிக்காத PCCI இறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை அழைத்தது பாகிஸ்தானியர்களிடம் வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.
  மே 19-ல் நடந்த சுற்றிவளைப்பில் மும்பை நிழல் உலக தாதா ஷோட்டா அகிலின் சூதாட்ட நிலையம் கைப்பற்றப்பட்டது. கைதானவர்கள் சூதாட்டத்தின் மூலம் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக கூறியதோடு, பல நாடுகளில் தங்கள் நிலையங்கள் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். "ஆட்ட நிர்ணயம் ஏதேனும் ஒரு பந்தில் நடக்கிறது என்பதால் கண்டுபிடிக்க மிக சிரமம்" என்று ICCI கூறி விட்டது.
  IPL-ல் இரவு நேர விருந்துகள் பற்றி எந்தவொரு செய்தியும் வரவில்லை ஏனெனில் ஊடகவியலாளர்கள் அவ்விருந்தில் அனுமதிக்கப்படவில்லை.
  இதற்கிடையே IPL-ஐ தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
  IPL-ல் அதிகம் விளையாடுவது வீரர்கள் அல்ல; பணம்தான்.



விழிச்சவாலின் 2012 மே மாத இதழுக்கு எழுதிய கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக