இங்கே துலாவு

செவ்வாய், 7 மே, 2019

எழுமா இமயம்?


   பிரதேசமெங்கும் பிரார்த்தனைகள்; அணித்தலைவர்களின் ஆறுதல்கள். எந்த நாடு ஆடினாலும் ஏந்தியிருந்தனர் பதாகைகளை, இவர் நலம் பெறவேண்டுமென்று. அமெரிக்காவிலிருந்து இவர் திரும்பிய பிறகுதான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

  டி 20, ஒருநாள் போட்டி, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவு என உலக கிண்ணங்களை தன் உத்வேகமான ஆட்டத்தால் இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தவர் இந்த யுவராஜ்சிங்.
  உலக கிண்ணம் பெற்ற உற்சாகத்திலிருந்த ரசிகர்களை உலுக்கியது ஒரு செய்தி. யுவராஜ்க்கு நுரையீரலில் நீர் கட்டி; இந்த தவறான முடிவை அறிவித்தது ஒரு பிரபல மருத்துவமனை. தவறைத் திருத்துவதை விடுத்து தடயங்கள் அளிக்கப்பட்டன. அவருக்கு இருப்பது   புற்றுநோய் என்று தெரிய வந்தவுடன் யுவராஜ் வாகனத்திலும், மருத்துவமனையிலும் இருந்த மருத்துவ அறிக்கைகள் மாயமாகின. 
  சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் யுவராஜ். மனதில் பலமிருந்ததால் உடல் ஒத்துழைத்தது.  பலம் கொடுத்தது லாங் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை வரலாறும், அவருடனான சந்திப்பும். புற்றுநோயைப் புறந்தள்ளிவிட்டு புத்துணர்ச்சியுடன் விளையாடிய சில சிகரங்களை அறிந்துகொள்வோம்.
  அமெரிக்கா சைக்கிள் ஓட்ட வீரர் லாங் ஆம்ஸ்ட்ராங்.  இவருக்கு புற்றுநோய் அபாய நிலையிலிருந்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. லாரன்ஸ் கேக்ஹான் என்ற மருத்துவர் இவரை குணப்படுத்தினார்  (யுவராஜ்ஜை குணப்படுத்தியவரும் இவரே). நோயிலிருந்து மீண்ட ஆம்ஸ்ட்ராங் பிரான்ஸ் 20 உலக சைக்கிள் ஓட்டப்போட்டியில் 1999 முதல் 2005 வரை தொடர்ச்சியாக 7 வாகையர் பட்டங்களை வென்றார்.
  டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்தினலோவா. இவருக்கு 2001-ல் மார்பக புற்றுநோய் சரிசெய்யப்பட்டு, ஆஸ்திரேலியா பகிரங்க போட்டியில் மூத்தோர் (SENIOR) பிரிவில் நமது நாற்பத்தெட்டாவது வயதிலும் உற்சாகமாக விளையாடினார்.
  எரிக்ஸ் எபிடேல் பிரான்சின் உதைப்பந்து விளையாட்டு வீரர். இவருக்கு 2011-ல் புற்றுநோயிருப்பது கண்டறியப்பட்டு, குணமாகி மூன்றேமாதங்களில் மைதானத்தில் இறங்கி கலக்கினார்.
  கனடாவில் பனி ஹாக்கி வீரர் மார்க் லெமிக்ஸ், கூடைப்பந்து வீராங்கனை அட்னா கேம்பல், கோல்ஃப் வீரர் ஆனல் பாமல், டென்னிஸ் வீராங்கனை அலிஸ்டா கிளைமோவா போன்றோர் புற்றுநோயிலிருந்து மீண்டு மைதானத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.
  ஜே.பி. யாதவ் புற்றுநோயிலிருந்து மீண்ட பின்பே இந்திய அணியில் இடம்பிடித்தார். தேவ் கலகன் என்ற தென்னாப்பிரிக்க சகல துறை கிரிக்கெட் வீரர் 1991-ல் புற்றுநோய் சரிசெய்யப்பட்டு 2003-ம் ஆண்டு வரை அணியில் விளையாடினார். 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு உலக கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த சைமன் டொனால்டும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டவரே.
  இப்படி கலக்கிய வீரர்கள் நம் கண் முன்னே இருக்கின்றனர். புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைத்த யுவராஜ் தனது திறமைகளால் உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கவேண்டுமென வாழ்த்துவோம்.


விழிச்சவாலின் 2012 மார்ச் இதழுக்காக எழுதிய கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக