இங்கே துலாவு

திங்கள், 6 மே, 2019

தீர்க்கமான தீர்மானம்


உடைகள்  ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டேன்
குடிப்பதற்கு தண்ணீர்
நெற்றியிலே திருநீர்

வழிச்செலவுக்குப்  பணம் கொடுத்தார்கள்
வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்
இதுதான் எங்கள் முதல் பயணம்
 
எடுத்துக்கொண்ட  பொருட்களோடு
எதிர்பார்ப்பையும்  சுமந்து சென்றோம்
ரயிலும் காலமும்  சேர்ந்தே நகர்ந்தன
கடந்த காலக் கதைகள் காற்றில் கலந்தன.


சேர்ந்து கொண்டனர் சென்னையில் சிலபேர்
ஆள் அதிகரித்ததால்
அரட்டையும் அதிகரித்தது.

அரட்டை அடங்கியது
அடுத்த மாநிலத்திற்குள்
பக்கத்தில்தான்  நின்று பேசினார்கள்
புரியவில்லை  என்றோம்

நன்றாய்ப் பேசத்தெரிந்தும்
ஊமைகளாய் நின்றோம்
பாஷைகளின்  பாகுபாட்டால்
நிலைமையைச் சமாளிக்க
நீந்திதான்  ஆகவேண்டும்
கைகொடுத்ததுகிரிக்கெட் கமெண்டரி

குறைவான சாப்பாடு
கடுமையான  விலையில்
கீறல் விழுந்த கேசட் போல
மீண்டும் மீண்டும் சொல்லி
விற்றுப் போயினர்  வியாபாரிகள்
கர்னாடக மாநிலத்து  கடலைக்கார அம்மா
அவள் பேசும் பாஷை புரியவில்லை

பேச்சில் பாசம் தெரிந்தது
உண்ட உணவுகள் புதிதாய் இருந்தன
விளையாடிய உணர்வுகளும்
இனிதாய் இருந்தன

ஆங்கிலம் பேசியும் அறவே மதிக்கவில்லை
"ஹிந்தி தெரியாதா " என ஏளனம் செய்தனர்

கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும்
தீர்மானங்களைத் தீர்க்கமாய் எடுத்தோம்
அடுத்த பயணமும் வந்தது

முன்பைவிட வெகுதூரம்
விளையாட்டில் முன்னேற்றம்
எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தன

தீர்மானங்கள் மட்டும்
தீர்மானங்களாகவே இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக