இங்கே துலாவு

சனி, 4 மே, 2019

நல்ல திட்டம்


சூரியன் உதித்தது,
இலையும் துளிர்த்தது,
எங்க துயரம் மாறல!

மாத்தி மாத்திக் குத்தஞ்சொல்லி
அவங்க சண்டையும் தீரல.

காலங்காலமா வழக்கு நடத்தி
வந்ததையா தீர்ப்பு.
வாரியத்துக்கு வெளக்கங்கேட்டு
வக்கிறாங்களே ஆப்பு.

பக்கத்து மாநிலத் தேர்தல்தானே
பாரதக் கச்சிக்கு இலக்கு.
நாடாளுமன்ற தேர்தலுக்காக
கைவசமிருக்கொரு வழக்கு.

தண்ணியுமில்ல வெளச்சலுமில்ல
தவிக்கிறோம் நாங்க தூங்காம.
அதனால்தானே தள்ளுபடி செய்யச்சொல்லுறோம்
வெவசாய கடன்சும தாங்காம.
ஆனா, தொழிலதிபர்களுக்கு வாரிவழங்குறீங்க
நல்லாருக்குயா ஒங்க நாட்டாம?

உலகுக்கே உணவு கொடுக்க
நடந்தோம் நாங்க சேத்துல.
இப்போ, ஒருவா கஞ்சிக்கு வழியில்லாம
தொங்குறோம் நாங்க தூக்குல.

ரதத்தக் கொண்டுபோக மட்டும்
கூடச்சொன்னீகளே இந்துக்களா?
தண்ணி கேட்டா மட்டும்
ஒதுக்குறீகளே வெறும் ஜந்துக்களா?

போராட்டங்கள் செய்யாதீர்கள்;
சட்டம் ஒழுங்க மதிக்கனும்.
நீதிமன்ற தீர்ப்பயே கெடப்பில் போட்ட
உங்களத்தாயா மிதிக்கனும்.

4000 ஆண்டா காவிரியும்
நல்லாதானே ஓடுது.
அதில் கொஞ்ச நாளா,
அரசியல் என்னும் சாக்கட கலந்து
அசிங்கமாக நாறுது.

நதிகளை இணைக்க
நல்லதொரு திட்டமிருக்குது கேளுங்க!
அப்படி என்ன திட்டமென்று
எங்களுக்கு முதலில் சொல்லுங்கள்!
செல்ஃபோன எடு;
மிஸ்ட் கால் விடு!
--


காவிரி தீர்ப்பு வந்தபோது, 2018 ஏப்ரல் மாத விரல்மொழியர் மின்னிதழுக்காக எழுதிய கவிதை இது.

2 கருத்துகள்: