இங்கே துலாவு

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

கண் தெரியாத இசைஞன்

இன்று சர்வதேச புத்தக தினம். அதனால் இன்று ஏதேனும் ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து விடுவது என முடிவு செய்தேன். எனவே நீண்டநாளாக படிக்க நினைத்த ரசிய நாவலான கண் தெரியாத இசைஞன் என்ற நாவலை படிக்கத் தொடங்கினேன். இந்நாவலின் கதை கடந்த கால எனது வாழ்க்கை
நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது!
நான் பிறந்து ஒன்றரை மாதம் இருக்கும். என்னை தூக்கி வைத்திருந்த சித்தப்பா தான் அதை முதல் முதலில் கண்டறிந்தார். நான் சத்தம் வரும் திசையை வைத்தும், வெளிச்சத்தை பார்த்தும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். எனது சித்தப்பாவிற்கு ஒரு சந்தேகம் எழுந்தது ஏன் குழந்தை முகத்தை பார்த்து சிரிக்கவில்லை? பின்பு கண்களை உற்றுப் பார்க்கிறார். விழிக்கோலமானது நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது. கைகளை முகத்திற்கு நேரே ஆட்டியும், பொருள்களை முகத்துக்கு நேரே காட்டியும் பார்க்கிறார். நானோ சம்பந்தமில்லாத திசையில் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். அப்போது எனது பெற்றோரை அழைத்து, குழந்தைக்கு பார்வை தெரியவில்லை என்ற செய்தியை கூறியதும் அனைவருமே ஆடித்தான் போனார்கள்.
பின்னர் மிகுந்த அரவணைப்புடன் எனது பெற்றோர் என்னை வளர்க்கத் தொடங்கினர். பார்வையற்றோருக்கான பள்ளிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருந்தன. அங்கே குழந்தையை சேர்த்தால் விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டும். இதைக் கேள்விப்பட்ட எனது பெற்றோர், என்னை அனுப்ப மனமின்றி இப்படி சொல்லினர் " நாங்க குடிக்கிற கஞ்சியில ஒரு கை கஞ்சிய கொடுத்து நாங்க இருக்கிற வரையும் குழந்தையை பாத்துக்கிறோம். குழந்தையை தனியா எல்லாம் அனுப்ப முடியாது" என்று சொன்ன எனது பெற்றோரின் மனதை மாற்ற 3 வருடங்களுக்கு மேல் ஆனது. எனது எதிர்கால நலன்களை பற்றி சொல்லி அய்யாசாமி அண்ணன்தான் பள்ளியில் சேர்க்க வைத்தார். அவரை நினைவுபடுத்தியது மக்சிம் பாத்திரம்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது மதுரையில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்தை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது நடைமேடையில் ஒருவர் மீது தெரியாமல் மோதி விட்டேன். அவர் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி கண்டபடி திட்டுகிறார். அதுதான் எனது தனியாக செல்லும் முதல் பேருந்து பயணம். அதனால் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். மேலும் அவர் திட்டிய திட்டுக்கள் என்னை ஒடுங்கிப் போகச் செய்துவிட்டது. வாய் குழரியது மிகுந்த தயக்கத்துடன் எனக்கு கண்ணு தெரியாது சார். தெரியாம மோதி விட்டேன் என்று சொல்லும் போதே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவர் உடனே அப்படியா தம்பி சாரிப்பா எனச் சொல்லிவிட்டு கடந்து விட்டார். அதுதான் ஒருவரிடம் என் ஊனத்தை முதல் முறையாக நான் சொல்லிய தருணம். அந்த சூழலை எப்படி கையாள்வது என தெரியாமல் திண்டாடிப் போனேன். அன்று பேருந்தில் ஏறிய பிறகு ஜன்னல் பக்கம் திரும்பி யாருக்கும் தெரியாதவாறு நீண்ட நேரம் அழுது கொண்டே வந்தேன். எமிலி பியோதர் இருவரின் இரண்டாம் சந்திப்பு இந்நிகழ்வை எனக்கு நினைவுபடுத்தியது.
விளாதீமிர் கொரலேன்கோ  13 வருடம் பார்வையற்றவர்களை ஆய்வு செய்து இந்நூலை எழுதி இருக்கிறார். அதன் பயனை எழுத்தில் உணரமுடிகிறது. பார்வை மாற்று திறனாளிகளின் இயல்புகள் அசைவுகள் போன்றவற்றை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார். இன்றைய நாளை கண் தெரியாத இசைஞன் அழகாக்கி விட்டாந். இது போன்றே பார்வையற்றோரின் வாழ்வியலை பிரதிபலிக்கும் தரமான நாவல்களை பார்வைமாற்றுத்திறனாளிகளெ இன்னும் சில ஆண்டுகளில் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

6 கருத்துகள்:

  1. படித்ததும் பதில் எழுதத் தோன்றியது. நான் நீண்ட காலம் முன்பு படித்த மிக அருமையான ரஷ்யப் புதினம். கதையில் வரும் வர்ணனைகள், அழகான வார்த்தைகள் என வாசிப்பின் அனுபவத்தை முழுமையாக கொடுக்கும் கதை. பாராட்டுக்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் நம்பிக்கை இருக்கிறது அண்ணா நீங்கள் அந்த எழுத்துப் பயணத்தின் முதல் நாவலாசிரியராக இருப்பீர்கள் என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது நம்பிக்கைக்கு மிக்க நன்றி. நான் என்னை நினைத்து இதை சொல்லவில்லை. என்னைவிட சிறப்பாய் எழுதும் நபர்கள் இருக்கிறார்கள் அவர்களை நினைத்தே சொன்னேன். உங்களது நம்பிக்கையைப்போல நடந்தாலும் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. மிகவும் அருமை.. அந்த நாவல் படிக்கவில்லை... படிக்காமலே நாவலை உணர வைத்து விட்டாய்.. கண்களில் கண்ணீர் வர வைத்துவிட்டாய்....

    பதிலளிநீக்கு
  4. சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு தங்களுடைய இந்த படைப்பு பலருக்கும் உற்சாகம் அளிக்கும் என நம்புகிறேன் உங்களைப் போன்ற சிலருடைய முயற்சி நல்ல பலனை தரும்.

    பதிலளிநீக்கு