இங்கே துலாவு

திங்கள், 3 டிசம்பர், 2018

எங்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்

பார்வையற்ற குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு இருக்கிற ஒரே ஆசை நம்ம புள்ளக்கி எப்படியாவது கண்ணுதெரியனுங்கிறதுதான். அதனால் யார் எது சொன்னாலும் அதனை அவர்கள் செய்துபாக்கத்தொடங்கிவிடுவார்கள். பார்க்கிற எல்லோரும் மருத்துவரைப்போல எனது பெற்றோரிடம் பல ஆலோசனைகளை அள்ளித்தெலித்திருக்கிறார்கள். அதனைக்கேட்டு எனது
கண்ணில் பால், கோழி இரத்தம், பலவகையான இலைச்சாறுகள் என விதவிதமாய் விட்டு பலநாள் படுக்கவைத்திருக்கிறார்கள். இப்படி பலர் சொல்லிய வைத்தியமுறைகளை எல்லாம் என் பெற்றோர் என்கண்ணில் பரிசோதித்துப்பார்த்தனர். ஒவ்வொரு மருத்துவமுறைகளையும் சொல்பவர்கள் அதற்கு வலுசேர்க்கும்வகையில் ஒரு கதையையும் வைத்திருப்பார்கள்.

கொப்பனக்கோட்ட வாத்தியார் இருக்காருள்ள; ஊரிலே பெரியாளு. அவரத்தெரியாதவங்க யாருமே இருக்கமுடியாது. அப்ப எங்கம்மா அப்புராணியா கேக்கும், யாருக்கா அவரு? அந்நக்கி பெரியாசுப்பத்திரிக்கிப்போகும்போது எனக்கிட்டகூட போயித்துவாரேன்னு சொல்லிட்டுப்போனாறே? நல்லா கருகருன்னு குட்டயா இருந்தாரே அவருதான். எங்கம்மாவும் வேற வழியில்லாம, அவராக்கா என சரனடைந்துவிடும். அவரு எங்க சொந்தக்காரருதான். எங்க சின்னாயியோட பெரியப்பாவோட மகனோட அக்கா மகளைத்தான் அவருக்கு கட்டியிருக்கு. அவரோட மகனுக்குக் கண்ணே இல்ல. எங்கெங்கெயோ வைத்தியம் பாத்துருக்காங்க யாருமே சரியாக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. குமுலாங்கொண்டுல ஒரு வைத்தியாரு நந்தியாவட்டப்பூவ 48 நாளு கண்ணுல வச்சுக்கட்டச்சொல்லிருக்காரு. அப்படி கட்டுனதுல; தூந்துருந்த கண்ணு தெரிய ஆரம்பிச்சுருச்சு. டாக்டருக்கேல்லாம் ஒன்னும் தெரியாது, காசக்கரக்குறதுலேயே குறியா இருப்பானுங்க. இப்படி ஒரு கதையச்சொல்லிட்டு அந்த அம்மா போனதுமே; எங்க வீட்டில் நந்தியாவட்டப்பூவ என்னோட கண்ணுல கட்டத்தொடங்கிட்டாங்க.

காசு பாயிண்ட எங்கம்மா நெனவுல வைச்சுருந்திருக்குபோல;, அரவிந் மருத்துவமனையில டாக்டருக்கிட்ட எத்தன லச்சம் செலவானாலும் பரவால்ல எம்புள்ளக்கி கண்ண மாத்திவச்சாவது பார்வ கொடுத்துருங்க எனச்சொன்னுச்சு. அதுக்கு டாக்டர் சொன்னார் கண்ணுல நரம்பு ஜாயிண்டே ஆகல அதுனால கண்ண மாத்தமுடியாதுன்னு சொன்னதோட; என்ன சிறப்புப்பள்ளியில சேத்து படிக்கவைக்கச்சொல்லிட்டாரு. அங்கே விடுதில தங்கி படிக்கத்தொடங்கியதுலேருந்துதான்  பரிசோதனை முயற்சிகளிலிருந்து தப்பித்தேன்.

எனக்குச் சுத்தமா பார்வ இல்லாததினால் இந்தப் பரிசோதனைகளால் எந்த பாதிப்புமில்லை. இதுபோன்ற நாட்டு மருத்துவ ஆலோசனைகளால் கொஞ்சங்கொஞ்சம் பார்வை தெரிந்த என் நன்பர்கள் முழுது பார்வையை பறிகொடுத்திருக்கிறார்கள். இப்படி கட்டுக்கதையாளர்கள், பலர் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக