பக்கங்கள்

இங்கே துலாவு

செவ்வாய், 4 டிசம்பர், 2018

எதுக்கும் உதவாது

ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்ன; அப்படியே ஒரு ஃபிலாஸ்பேக்குக்குப்போவோம். எங்க ஊரிலே பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, கோழி என்பனவற்றுள்  ஏதேனும் ஒன்றையோ, அல்லது அனைத்தையுமோ வளர்த்துவந்தனர். வீட்டுக்கு ஒதுக்குப்புரமாக பெரிய குழி
வெட்டிக் குப்பைகளை அதில் சேகரித்தனர். வீட்டைச்சுத்தி வம்பரை, கெலரியா போன்ற மரங்களை அதிகம் வளர்த்தனர். குப்பைக்குழியில் உள்ள குப்பைகளை வயலுக்கு உரமாகப்பயன்படுத்தினர். தொழியடித்த பிறகு, வம்பரை, கெலரியா இன்னும் பல மரங்களின் இலைதழைகளை வயலில் கொண்டுவந்து பரப்புவர். இவ்வாறு இயற்கைமுறையில்தான் வேளான்மை செய்துவந்தனர். விளைச்சல் நெல்லைக்கொண்டுதான் சோரு பொங்கி உண்டனர். எங்கள் பகுதியில் கடலை, எள், வரகு, உழுந்து, சோளம், இன்னும் பல பயரு வகைகளும் விளைவிக்கப்பட்டன. அதனால் அவை அனைத்துமே அவர்களது அன்றாட உணவில் இடம்பெற்றன. பிற சரக்கு சாமான்கள் வாங்க ஆண்டுக்கு ஒருமுறை கொல்லிமலைக்குச்சென்று வாங்கிவந்தனர். மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, பப்பாளி என ஏகப்பட்ட கனிகள் தின்பதற்குக்கிடைத்தன. ஆடுகளை ஓட்டிக்கொண்டு காட்டுப்பக்கம் செல்லும்போதும் சூரைப்பழம், காரப்பழம், ஏளந்தப்பழம், கொவ்வாப்பழம், என இயற்கை அவர்களுக்குப் பலவற்றை அள்ளிக்கொடுத்தது. சோனா ரொட்டியும், கல்கோனாவுந்தான் எங்கள் ஊர் குழந்தைகள் எப்போதாவது தின்னும் நொருக்குத்தீணிகள். எங்கள் ஊருக்கு ஐஸ்காரர் வரும்போது; குழந்தைகள் ஐஸ் கேட்டு அடம்பிடிக்கும். ஐஸ்காரர் போகும்வரை காசைத்தேடுவதுபோல பாவனைசெய்து அதையும் வாங்கித்தரமாட்டார்கள். தலைக்கு வேப்பெண்ணெய்தான் தேய்த்தனர். எல்லா எண்ணெய்களும் செக்கில் ஆட்டப்பட்டது, மாவு ஆட்டுக்கல்லில் ஆட்டப்பட்டது, அருசி உரலில் இடிக்கப்பட்டது, உழுந்து திருகையில் உடைக்கப்பட்டது, அமியில்தான் மசாலை அரைக்கப்பட்டது, மொத்தத்தில் இயற்கையோடு இயைந்தபடிதான் மக்களின் வாழ்வு இருந்தது.
அப்படி மக்கள் வாழ்ந்த ஊரில் 10-க்கும் அதிகமானோர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொருவரும் பத்தோ பன்னிரண்டோ பிள்ளைகள் பெற்றனர்; அதில் ஐந்தோ ஆறோதான் மிஞ்சியது.

அப்படியே 25 ஆண்டுக்கு முன்னாடிவருவோம். அப்படி இயற்கையோடு இயைந்து வளர்ந்த இருவருக்குத் திருமணம் நடந்தது. அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தைக்கு பார்வை இல்லை. கடவுள்மேல் பாரத்தப்போட்டுட்டு அடுத்த குழந்தையாவது நல்லா பொறக்கனுமுன்னு வேண்டிக்கிறாங்க. அடுத்த குழந்தையும் பார்வ இல்லாமலே பொறந்துறுச்சு. இப்ப மருத்துவருக்கிட்ட ஆலோசனை கேட்குறாங்க. தாய பரிசோதித்த மருத்துவர்; கற்பகாலத்தில் முறையான மருந்து எடுக்காததுதான் காரணம் என்பதைக் கூறுகிறார். முறையான மருந்துகளை எடுத்ததால 3-வது  குழந்த எவ்வித பாதிப்புமில்லாமல் பொறந்துச்சு. அன்றைய காலகட்டத்தில் எங்கள் கிராமத்தில் மருத்துவம்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் எங்கள் வீட்டில் இரு பார்வையற்றவர்கள் இருக்கிறோம். கற்பகாலத்தில் தாய்சேய் நலனில் அக்கரைகாட்டுங்கள்; நீங்கள்  பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்க்க அது உகந்த தருணமல்ல. குழந்தை இறந்துவிட்டால்கூட அத்துயரம் கொஞ்ச நாளில் மறைந்துவிடும். ஊனத்தோடு ஒரு குழந்தை பிறந்தால் பெற்றோருக்கும் அக்குழந்தைக்கும் பெருந்துயரைக்கொடுக்கும். ஊனமுற்றவர்கள் சந்திக்கும் துயர்கள் உங்கள் கற்பனைக்கு எட்டாதது.

 சமூக ஊடகங்களில் எப்படி வேண்டுமானாலும் கம்பு சுற்றுங்கள்; நடைமுறை வாழ்வில் முறையான மருத்துவப்பரிசோதனைகளை செய்துகொள்ளுங்கள். அவ்வாறு செய்யாமல் இழப்பு ஏற்ப்பட்டால் வாங்கின 545 லைக்கும், 154 கமெண்டும் 67 சேரும் எதுக்கும் உதவாது.

கடைசியா என்னையும் கருத்துச்சொல்ல வச்சுட்டிங்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக