இங்கே துலாவு

வியாழன், 8 பிப்ரவரி, 2024

எங்க பள்ளி நல்ல பள்ளி: ஆண்டு விழா பாடல்

பள்ளி ஆண்டு விழாவிற்காக நீண்ட நாளைக்கு பிறகு ஒரு பாடலை எழுதியிருந்தேன். பள்ளி விழாக்களுக்கு பாடல் எழுதுதல் என்பது கஸ்ட்டமில்லை. லகுவான வரிகள், மாணவர்கள் தங்களை பொருத்திக்கொள்ளும் சில நிகழ்வுகள் இருந்தால் போதும். கைதட்டை வாங்கிவிடலாம்.

 

தன்னானே தானேனன்னே,”

தன்னானே தானேனன்னே,

தானனானே தன்னேனன்னே

தானனானே தன்னேனன்னே”

 

என்ற மெட்டில் பாடலை எழுதியிருந்தேன். பதினோராம் வகுப்பு மாணவி பிரதீபா இன்று மேடையில் அரங்கேற்றினார். அவருக்கு வாழ்த்துக்கள்!

இனி பாடல் வரிகள்...

 

“எங்க பள்ளி நல்ல பள்ளி!

நாங்கபோவமுங்க நாளும் துள்ளி!

படிக்கிறோமே அருமையாதான்

இப்ப சொல்ல போறோம் அந்த பெருமையைத்தான்.

கருமாரி காக்கும் ஊரு

மாதம் மும்மாரி பொழியும் ஊரு

குட்டி சிங்கப்பூராம் நம்ம செலட்டூரு

 அதுல ஹைலைட் நம்ம ஹையர் செகண்டரி ஸ்கூலு.

 

அருமையான ஹெட் மாஸ்டர்

எங்களைக் காக்கும் ரிங் மாஸ்டர்

வேலாவேலை சாப்பிடச் சொல்வார்

நல்லா படிக்கணும்னு கூப்பிட்டு சொல்வார்.

கடுமை காட்டும் சிங்கமுங்க

கணக்கு சார்,

கொனத்துல கட்டி தங்கமுங்க.

பயமுறுத்துவாரு பயாலஜி சாரு

ஆனா, உண்மையிலே ரொம்ப பாசக்காரு.

 

வகுப்புலயும் பாக்கலாங்க,

ஹைடெக் லேப்லயும் பாக்களாங்க,

11ஆம் வகுப்பயே காக்கிறாங்க

அவங்க நம்ம கம்ப்யூட்டர் டீச்சருங்க.

இயற்பியல் வேதியல் டீச்சருங்க

அவங்க, பாடம் எடுக்கிறது சூப்பருங்க.

இளமையான இங்கிலீஷ் சாரு

அவர் எளிமையாக நடத்துவாரு.

 

அறிவை வளர்க்கும் அறிவியல் சாறு

விளையாட்டை மேம்படுத்தும் பீட்டி சாரு

தமிழ் ஆங்கிலம் கணிதம் என்று

எல்லா டீச்சரையும் வணங்குறோங்க.

பி.டி.ஏ., எஸ் எம் சி காரவங்க

ஸ்கூலுக்கு நல்லா உதவுறாங்க.

எங்களை நல்லா ஆளாக்கவே

ஆளு போட்டு நடத்துறாங்க.

 

ஊரில் உள்ள உத்தமர்கள்

ஸ்கூலுக்கு நல்லா உதவுறாங்க.

நாங்களும் படிச்சு உயர்வோமுங்க

உழச்சத ஸ்கூலுக்கும் தருவோமுங்க!

 

சேட்ட செய்வத மாத்திக்கிறோம்

பெரியோர் பேச்சக் காதுல ஏத்திக்கிறோம்

நாளை கோட்டையைப் பிடிப்போமுங்க

எப்போதும் நல்லா படிப்போமுங்க!”


பாடல் தோன்றிய விதம்:

நாளை ஆண்டு விழா என்றதுமே, மாணவி பிரதீபா சொந்த முயற்சியில் ஒரு பாடலை எழுதி பாடினார். ஆனால், ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் பாடும் அளவில்தான் இருந்தது. எனவே, அந்த மாணவியை ஊக்குவிக்கும் பொருட்டு; நானே அதே மெட்டில் பாடல் வரியை எழுதினேன். பாடலை, நேற்று இரவு எட்டு மணிக்குத்தான் எழுதி அனுப்பினேன்.  அதை மிகச் சிறப்பாக பயிற்சிசெய்து, இன்று பாடி அசத்திவிட்டார்.

 

திறமை வாய்ந்த பல மாணவிகள் பள்ளியில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உயர்நிலை வகுப்பிற்கு ஏற்ற வகையில்தான் பேச்சயோ, பாட்டையோ தயாரிக்கிறார்கள். கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் மேல்நிலை வகுப்பு தரத்தில் அவர்களும் மிளிர்வார்கள். அதற்கான சான்றுதான் இன்றைய பாடல்.

 

நீண்ட நாளைக்கு பிறகு நானும் பாடல் எழுதி இருக்கிறேன். பள்ளி காலத்திற்கு சென்று வந்த ஒரு உணர்வு. இன்னும் பல ஆசிரியர்கள் இதில் விடுபட்டிருக்கலாம். அது பாடலின் நீளம் கருதியே தவிர்க்கப்பட்டது. நிச்சயமாக இதனை அடியொற்றி நாளைய மாணவர்கள் பாடல்களை எழுதக்கூடும். மீண்டும் சிலட்டூர் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளை அலங்கரித்த அனைத்து மாணாக்கர்களுக்கும் இணையத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவன் முதுகலை தமிழாசிரியர் பொன்.சக்திவேல்.

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக