இங்கே துலாவு

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

அன்றுதான் பார்வையற்றோருக்கு புத்தக தினம்

சொற்களின் வழியேதான்  ஒரு பார்வையற்றவர் இந்த உலகத்தை அறிந்துகொள்கிறார்.  அதற்கு, வார்த்தைகளின் வாகனமான நூல்கள் பெரிதும் உதவுகின்றன.

"காவிரி ஆற்றில் பாம்பு போல்  நீரலைகள் புரளுகின்றன, நீரானது யானை போல் நகர்ந்து வருகிறது" என்றெல்லாம் )அம்மா வந்தாள்( நாவலில் தீ ஜானகி ராமன் வருணிக்கிறார். அவர் கண்களால் கண்டதை, வார்த்தைகளின் வழியே ஒரு பார்வையற்றவர், நூல் வாயிலாக அதனைத் தரிசிக்கிறார்.

ஒரு பார்வையுள்ளவரோடு நான் ஆற்றிற்குச்  சென்றால், ஆறு வந்துவிட்டது என்று சொல்வதோடு அவர் நிறுத்திக் கொள்வார். ஆனால், ஒரு நூலானது அங்குள்ள காட்சிகளைத் தெளிவாக வர்ணிக்கும். அதனால்தான் புத்தக வாசிப்பு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவை பெருக்குவதோடு, இந்த உலகைக் கண்டுணரவும் வழிவகை செய்கிறது. இப்படி பெரும் பயன் தரும் புத்தக வாசிப்பு, அவர்களுக்கு எளிதில் கிட்டுவதில்லை.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் மிகச் சில நூல்கள் பிரேயிலில் வந்தாலே பேரதிசயம். இன்று ஒரு சதவீதம் நூல்கள் ஒளி நூலாக வருகின்றன என வைத்துக்கொள்ளலாம். ஐந்து சதவீத நூல்கள் மின்னூலாகத் தோராயமாக வருகின்றன என வைத்துக் கொள்வோம். சுமார் 90% நூல்கள் பார்வையற்றோர் சுயமாகப் படிக்கும் வகையில் வருவதில்லை என்பது மிகப்பெரிய அறிவு புறக்கணிப்பு.

இத்தகைய புறக்கணிப்புகள் இருந்தாலும் பார்வை மாற்றுத் திறனாளிகள் நூல்களை வாங்கவே  முயல்கின்றனர். அந்த நூல் வாங்கும் படலமுங்கூட மிகத் துயர் மிகுந்ததாகவே

இருக்கிறது.

ஆண்டு முழுவதும் பல நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அவை, பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்றுவர உகந்ததா என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

உடன் அழைத்துச் செல்பவர் இல்லாமல் ஒரு பார்வை மாற்றுத் திறனாளி புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வர இயலாது. புத்தகப் பட்டியலைத் தயாரித்து கடைக்காரரிடம் நீட்டினால், அந்த நூல்கள் அங்கு இருக்கிறதா இல்லையா என்று விற்பனையில் அமர்ந்திருக்கும் பிரதிநிதிக்குத் தெரியாது. அதனால், உடன் அழைத்துச் செல்பவர் புத்தகம் வாசிக்கத் தெரிந்தவராக, பொறுமைசாலியாக இருக்க வேண்டும். உடன் அழைத்துச் செல்பவர் கிடைப்பதே சிரமமான இக்காலகட்டத்தில், மேலே குறிப்பிட்ட தகுதியுடன் இருப்பவர் கிடைத்தால் மட்டுமே பார்வை மாற்றுத் திறனாளிகள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியும்.

இந்த பிரச்சினையே வேண்டாம், இணையத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என இணைய அங்காடிகளைத் திறந்தால், அதன் வலைத்தள பக்கங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் எளிமையானதாக இல்லை. இவற்றையெல்லாம் தாண்டியே ஒரு புத்தகத்தைப் பார்வை மாற்றுத் திறனாளி வாங்க வேண்டி இருக்கிறது.

புத்தகம் கையில் வந்ததும் வாசித்து விடலாமா என்றால் அதுதான் இல்லை. அதற்குப் பிறகும் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. சில பார்வை மாற்றுத் திறனாளிகள் தொகைக்கு வாசிப்பாளரை அமர்த்தி வாசிக்கின்றனர். சிலர் புத்தகங்களை வாங்கி, தொகை கொடுத்து ஸ்கேன் செய்து மின்னூலாக மாற்றுகின்றனர். நான் நூல்களை ஸ்கேன் செய்வதற்கென்றே, உயர்தர மின்வருடி, கணினி என ஒன்றரை லட்ச ரூபாய் வாசிப்பதற்கு முதலீடாக இட்டுள்ளேன். மின்னூலாக மாற்றிய பிறகு அவற்றை ஓசிஆர் செய்தால்தான் படிக்க இயலும். எனவே, ஒரு 500 பக்க புத்தகத்தை ஓசிஆர் வழி எழுத்துக்களாக மாற்ற, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாகும். இத்தனை தடைகளைத் தாண்டித்தான் ஒரு பார்வையற்றவர் நினைத்த நூலை வாசிக்கிறார்.

ஒரு பொருள் இயலாதவருக்குத்தான் எ ளிதில் கிட்ட வேண்டும். இங்கே எதிர்மாறாய் இயலாதவர்களுக்கு எல்லாமே எட்டாத தொலைவில் இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மின்னூல்தான். மின்னூலைக் கணினியில் உள்ளிட்டு பிரேயில் வடிவிலும், ஒளிநூலாகவும் பார்வையற்றோரால் படிக்க இயலும். ஆனால், மின்னூல் பைரசிக்கு வழிவகுக்குமெனப் பலர் வெளியிடத் தயங்குகின்றனர். திருட்டுத்தனத்திற்கு வருந்துமளவிற்கு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவு மறுக்கப்படுகிறதே என்பது குறித்து யாரும் வருந்துவதாகத் தெரியவில்லை. திருட்டுத்தனத்தைத் தடுப்பதற்கான வழியை ஆராய வேண்டுமே தவிர, மின்னூல் வெளியீட்டை முற்றிலுமாக நிறுத்தக்கூடாது.

ஆயிரக்கணக்கான அச்சு நூல்கள் ஸ்கேன் செய்து இணையத்தில் உலா வந்த சங்கதியெல்லாம் உலகறியும். அதற்காக, யாரும் அச்சு நூல் வெளியீட்டை நிறுத்தவில்லை. எனவே, திருட்டுத்தனம் செய்பவர்கள் எப்போது எப்படி வேண்டுமானாலும் செய்து கொண்டேதான் இருப்பார்கள். அதைத் தடுக்கும் வழியைத்தான் நாம் ஆராய வேண்டும்.

பார்வையற்றோருக்கு அறிவு மறுக்கப்படுகிறதே இது அறந்தானா முறந்தான என்றெல்லாம் கேள்வி கேட்டு நான் கழுத்தறுக்கப் போவதில்லை. வணிகனாகச்ச் சிந்தியுங்கள். பார்வை மாற்றுத் திறனாளிகள் பலர் பொருளீட்டுகின்றனர். வாசிப்பிற்கென்றே குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றனர். ஆனால், புத்தகம் வாங்கும் நடைமுறைதான் மிகச் சிக்கலாக இருக்கிறது. அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்த இடத்தில்தான் வெற்றி பெறுகின்றன. பொருளீட்டும் அனைத்து தரப்பினரையும் தங்களை நோக்கி  ஈற்கின்றனர்.

எனக்குத் தெரிந்து குறைந்தபட்சம் 100 பார்வை மாற்றுத் திறனாளிகளாவது அமேசான் கிண்டில் ஆண்டு சந்தா செலுத்திப் பயன்பெறுகின்றனர். அதனோடு தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தொகை கொடுத்தும் கிண்டிலில் வாங்கிப் படிக்கின்றனர். இதன்மூலம், ஆண்டிற்கு சில லட்சம் வியாபாரம் தமிழ்நாட்டுப் பார்வை மாற்றுத்திறனாளிகள் மூலம் நடைபெற்று வருகிறது என்பதே கண்கூடு.

அச்சு புத்தகங்களை வாங்கி படிப்பதற்கென்றே 20 பேர் ஒரு குழுவாக இயங்குகின்றோம். இதில், ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50,000 ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கி மின்னூலாக மாற்றிப் படிக்கிறோம். புத்தகங்களை பெரும்பாலும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றே வாங்குகிறோம். இணையத்தில் நூல்களை வாங்கும் வசதி பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் உகந்த வகையில் மாற்றப்பட்டால், நூல் வாங்கும் தொகை லட்சத்தைக் கூட தாண்டும். 

இங்கே பார்வை மாற்றுத் திறனாளிகளை வாசகராக அல்ல, ஒரு வாடிக்கையாளராகக்கூட யாரும் கருத்தில் கொள்வதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம். ஒரு பார்வை மாற்றுத் திறனாளி நினைத்த புத்தகத்தை, நினைத்த நேரத்தில் என்று வாங்கிப் படிக்க முடிகிறதோ, அன்றுதான் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குப் புத்தக தினம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக