இங்கே துலாவு

சனி, 19 ஆகஸ்ட், 2023

அழகர் கோயில் திருவிழா அக்கப்போர்கள்

அழகர் கோவில் திருவிழா ஆரம்பித்த உடனேயே, மதுரை தெருக்களில் இருவர் மிகவும்  பிஸியாகிவிடுவார்கள். ஒருவர் தேனிசைத் தென்றல் தேவா மற்றொருவர்

எஸ்ஸே ராஜ்குமார். "வாராரு அழகர் வாராரு"  என தேவா உச்ச ஸ்தாயில் கத்த,  வெத்தலையை போட்டபடி எஸ்ஏ ராஜ்குமாரும் அவருக்கு  ஈடுகொடுப்பார். 

இவர்களது சத்தத்தினால், பக்கத்தில் இருப்பவன் பேசுவதுகூட கேட்காது. மத்த நாளில் பேர் சொல்லிக் கூப்பிட்டாலும் பெப்பே காட்டிவிட்டு போகும் பயலுக, அன்று மட்டும் அருகில் வந்து அன்பொழுக ஆதி முதல் அந்தம் வரை நடந்த விஷயங்கள்  பற்றி வினவுவார்கள். “ஒன்னும் கேக்கலடா” என உரக்கச் சொன்னாலும். வாய்க்கு நேராய் கையை குவித்து, எனது காதுக்கு அருகே வந்து கத்தி தங்களது கதையை தொடர்வார்கள். 



அன்றும் அப்படித்தான். ஒரு கொடுமையான உரையாடலை முடித்துவிட்டு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ எனக்கு முன்னே நிற்பது போல இருந்தது. இடதுபுறம் நகர்ந்தாலும் அதே உருவம் இடதுபுறமும் நகர்கிறது. பிறகு ,வலதுபுறம் நகர்ந்தேன் அப்பக்கமும் அதே உருவம் முன்னாள் இருந்தது.

“கொஞ்சம் விலகிக்கோங்க நான் போகணும்“என இரு முறை சொல்லிப் பார்த்தேன்.  அப்படியும் அந்த உருவம் நகர்வதாக தெரியவில்லை. அதுவேறு, அதிக வாகனங்கள் செல்லும் சாலை. வெவஸ்த்த கெட்டுப்போய் எவனோ என்னை வம்பிழுக்கிறான் என எண்ணி, கோபத்தில் கையில் இருந்த ஸ்டிக்கை கொண்டு முன்னாள் சுத்தினேன். எனக்கு முன்னே எதுவுமே இல்லை. இரண்டு ஸ்பீக்கர்கள் நேர் எதிரே இருந்ததால் காந்தப்புலம் செய்த கலாட்டா அது  என மூளைக்கு தாமதமாக உரைத்தது.

நொண்டிசாமியும் காளிரத்தினமும் எப்போதும் எலியும் பூனையும் போல சண்டை போட்டுக்கொள்வார்கள். இரண்டு நாளுக்கு முன்புதான், நொண்டிசாமி வாடனிடம் காளிரத்தினத்தை வசமாக மாட்டிவிட்டு திட்டுவாங்க வைத்தான். அதிலிருந்து, தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் காளிரத்தினம். 

அன்று இரவு, சுந்தர்ராஜன்பட்டிக்கு அழகர் வருவதை முன்னிட்டு ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. கல்லூரி முடித்துவிட்டு பேருந்தில் வந்திரங்கிய நொண்டிசாமி, சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே, வேகமாக அருகில் வந்தான் காலிரத்தினம். 

நொண்டிசாமி கையைப் பிடித்த காளிரத்தினம்: ஒனக்கு அறிவில்ல?

நொண்டிசாமி: ஆமா.

கா: உனக்கு சூடுல்ல?

நொ: ஆமா.

கா: உனக்கு சொரணை இல்ல?

“ஸ்பீக்கர் சத்தத்தில்  அவனுக்கு கேட்கவில்லையோ என நினைத்து” நொண்டிசாமி அழுத்தி ஆமாடா எனச் சொன்னான்.

கா: நீ மானங்கெட்ட பயலாடா?

நொ: ஆமாடா. ரோட்ட கிராஸ்பண்ணனும் என சத்தமாகச் சொன்னான்.

இதற்கு மேல் திட்டினால் கண்டுபிடித்துவிடுவான் என முடிவு செய்த காளிரத்தினம், அவனை விடுதிக்கு அழைத்துச் சென்றான். அதன் பிறகு, இந்த விஷயத்தை தீயாய் பரப்பினான் .

ஒருவாறு காளிரத்தினம்  தனது கடும் பகையை கள்ளழகரின் அருளால் தீர்த்துக் கொண்டான்.

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக