இங்கே துலாவு

ஞாயிறு, 12 மே, 2019

சொல்லிவிடாதே


பனிக்கட்டியாய்  உறைந்தேன்
உன்  பார்வை படும்போது

இறகுகள்  வருடும்  சுகம்
உன்  நிழல்கள்  படும்போது


உன்  பேர்  எழுதிய  காகிதங்கள்  எதையும்
மண்ணில்  பார்த்திருக்க  மாட்டாய்
அவற்றிற்கு  என் வீட்டின் ஒரு  அறையே
கருவறை யானது.

நீ  என்னுடன்  சண்டை போட்டுக் கொள்வதும்
ஜோடி போட்டுச்  செல்வதும்
ஊருக்கும்  தெரியாது
உனக்கும்  தெரியாது

அவை என்  மனதுக்குள்  நடக்கும்
நாடகங்கள்

என்னிடம்  பெண்கள்  வருவதை  அனுமதிக்கவில்லை
உன்  கண்கள்  வருந்தும்  என்பதால்

என்  நற்பண்புகள்  எல்லாம்
உன்  முன்னே  அரங்கேறுகிறது

உன்  குரலைக்  கேட்கக் குவிகிறது  கவனம்
இப்படிக்  கவனிப்பது  இதுதான்
முதல்  தருணம்

என்  மனதுக்குள்
நீ  வந்ததும்
தூசுகள்  அனைத்தையும்
துடைத்துவிட்டேன்
தூரிகையால்  வண்ணம்
அடித்து விட்டேன்.

நீ  'உன்னைக்  காதலிக்கிறேன்'
என்று  என்னிடம்
சொல்லிவிடாதே

சொல்லும் போதே  காதல்
கொல்லப்படுகிறது.

காதல்  உணர்வுகள்  பரிமாறும்
உன்னத  உறவு
ஐம்புலனுக்கு  அப்பாற்பட்டு
வரும்  உணர்வு

வாய்  என்ற  வாய்க்கால்  வழி
வார்த்தைகளால்  சொல்லும்போது
மௌனங்களும்  பார்வைகளும்
மரணிக்கின்றன.

உள்ளத்தில்  இருந்த  காதல்  நடந்து
உதட்டிற்குக்  குடியேறும்

இறவுகளில்  கையடக்கத் தொலைபேசி
காதோரம்.

வாழ்க்கை  முழுவதும்
வார்த்தைகளால்  பேசும்
வசனங்களை
ஒரு  பார்வை  பேசி விடும்
பத்தே  நொடியில்

அன்பே  காதலைச்  சொல்லி விடாதே
உன்  நினைவுகள்  கொடுக்கும்
ரணங்கள்  போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக