இங்கே துலாவு

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

எங்கே செல்லும் இந்தப் பாதை

சாதனைகளை மட்டுமே சுமந்த விளையாட்டுச் சரித்திரத்தில் சர்ச்சை என்னும் கறை படியத் தொடங்கிவிட்டது.
எனது அணி வெல்லவேண்டும் என சாமிக்குக் காணிக்கைகள் செலுத்துவர். விளையாடுவதற்கு முன்பு அந்த சாமிக்குக்கூடத் தெரியாது

 யார் வெல்வார் என்று.
 ஆனால் ஒரு ஆசாமிக்குத் தெரிந்தது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல விளையாட்டுப் போட்டிகளில் முடிவை மேட்ச்பிக்ஸிங் மூலம் தீர்மானித்தவர் மஜித்கான்.
 இந்தத் திரைமறைவு வேலை வெளிச்சத்துக்கு வந்தது அவரைக் கைதுசெய்தபோது. அவர் வழக்கு நடக்கும் பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தகவல் மையமானது.
 வீரர்கள் மனத்தில் பண ஆசையை விதைத்து மேட்ச்பிக்ஸிங் மூலம் ஆதாயத்தை அறுவடை செய்கிறார். அவர் அனைத்துப் போட்டிகளிலும் தன் அற்புதத்தை அரங்கேற்றியுள்ளார்.
வழக்கு லண்டனுக்கு மாற்றப்பட்டது. பல வீரர்கள் முகத்திரை கிழியும் என்று பார்த்தால் ஆசிப், அமீர், சல்மான் பட் ஆகிய மூவரை மட்டும் தண்டித்து நீதியை நிலைநாட்டியதாம் சர்வதேசம்.
உலகக் கபடி கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணி நல்ல செய்தியைக் கொண்டுவரும் என நாம் காத்திருக்க ஊடகங்கள் தட்டிச்சென்றன அந்த வாய்ப்பை. அணியில் பாதிக்கும் மேற்பட்டோர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர். (தற்போது உலகக்கோப்பையை இந்தியா பெற்றுவிட்டது)
சர்வதேச கராத்தே சாம்பியன் போட்டியில் தன்னைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு வயது குறைவான பல வீரர்களை வீழ்த்தி  வெற்றிவாகை சூடினார்  62 வயது செல்லத்துரை கணேசலிங்கம் என்ற இலங்கைப் பெரியவர். ஊக்கமருந்துப் பேர்வழிகள் இந்தப் பெரியவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரும் கறுப்பரும் ஒன்றாய் ஆடியும், பாடியும், கட்டித்தழுவியும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இதைச் சாத்தியமாக்கியது வில்லியம் வெஸ் எலிக்ஸ் உருவாக்கிய ரக்பி விளையாட்டு.
1994-ல் லட்சிய வெறி நிச்சயம் வெல்லும் என உலகம் உணர்ந்தது. வீரர்களின் கடும் முயற்சியால் தென்னாப்பிரிக்கா உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றிய தருணத்தில்தான் அந்தக் காட்சி நிகழ்ந்தது. தென்னாப்பிரிக்கா ரக்பி உலகக்கிண்ணத்தை மட்டும் பெறவில்லை, தேச ஒற்றுமையையும்தான். ஆனால் ரக்பியின் தாயகத்திற்கா இந்த சோதனை!
இந்த ஆண்டு ரக்பி உலகக்கிண்ணம் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. அங்கு சென்ற இங்கிலாந்து அணி மைதானத்தில் மட்டுமல்லாமல் மதுபானங்களோடும் விளையாடினர். இரவு விடுதிகளில் பயிற்சியெடுத்தார்கள் போலும்.  மக்கள் அபிமானம் பெற்ற அணி அவமானத்தோடு நாடு திரும்பியது.
கணினியுகத்தில் விளையாட்டு வீரர்கள் பணத்திற்காக நடமாடும் விளம்பரப் பலகைகளாகினர். உலகக் கோப்பையில் கூட விளம்பரம் பொறித்த பற்கவசங்களைஅணிந்து விளையாடி I.R.B க்குபோட்டித்தொகையை அபராதமாகக் கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கும் தொகையே போதும் என்று வீரர்கள் விளையாடுகிறார்கள்.
உலகக் கால்பந்து சம்மேளனம் இண்டர்போலுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது சூதாட்டத்தைத் தடுக்கும். பிற விளையாட்டுச் சம்மேளனங்கள் இவ்வாறு ஒப்பந்தம் செய்யாததற்குக் காரணம் நிதிப் பற்றாக்குறையே.
வீரர்கள் தவறுகளைத் தெரிந்தே செய்கிறார்கள். காரணம் கடுமையான தண்டனைகள் இல்லை. பணியைவிட்டு நீக்கினாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில், குறைந்த நேரமே விளையாடினாலும் அதிகப் பணம் கொட்டும் போட்டிகள் புற்றீசல்கள் போல் பெருகிவிட்டன
விளையாட்டுப் போட்டிகளில் பணம் விளையாடுகிறது. இனி தரமான போட்டிகளை நடத்த தூய்மைப்படுத்தவேண்டியது மைதானத்தை அல்ல; விளையாட்டை.
2011-ஆம் ஆண்டு விழிச்சவாலுக்காக நான் எழுதிய கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக