இங்கே துலாவு

வெள்ளி, 31 மே, 2019

தமிழகத்தில் பார்வையற்றோருக்கான விளையாட்டின் போக்கும் எதிர்காலமும்:

பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடே விளையாட்டு. அது விளையாடுபவருக்கு மட்டுமல்லாது காண்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத்தரும் இயல்புடையது. அதனால்தான் தொல்காப்பியர்
         “செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
         அல்லல் நீத்த உவகை நான்கே“[1]
 என உவகை பிறக்கும் நிலைக்கலன்களுள் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிடுகிறார். இன்று விளையாட்டு தொழிலாக வளர்ச்சியடைந்திருக்கிறது. விளையாட்டிற்கு உடற்தகுதியும், பார்வைத்திறனும் முதன்மையானவை. எனவே, பார்வையற்றவர்கள் விளையாடமாட்டார்கள் என்ற முடிவிற்குப் பலரும் வந்துவிடுகின்றனர்.
பார்வையற்றவர்களுக்கு உகந்த வகையில் சில விதிகள் உட்புகுத்தப்பட்டு, பார்வையுள்ளவர்கள்  ஆடும் பெரும்பாலான விளையாட்டுகளையும் பார்வைமாற்றுத்திறனாளிகளும் ஆடுகின்றனர். இன்று உலகளவில் பார்வைமாற்றுத்திறனாளிகள் தொழில்முறை விளையாட்டுவீரர்களாக ஜொலித்துவருகின்றனர். இக்கட்டுரை பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்முறை விளையாட்டு (professional sports) குறித்த பார்வைகளை மட்டுமே முன்வைக்கிறது. தமிழகத்தில் பார்வையற்றோருக்கான விளையாட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது, வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பார்வையற்றோர் விளையாட்டின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் இக்கட்டுரை விவரிக்கிறது.
விளையாட்டு:
விளையாட்டுப் போட்டிகள் (Sport or sports) என்பவை உடல் வலுவையும் மனத்திண்மையையும் அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் அனைத்து வகையான உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளையும் குறிக்கும் [2]. தடகளம் அல்லது உடல் திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் போட்டிகள் மட்டுமே தொடக்கக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் என அங்கீகரிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற பெரிய போட்டிகளில் இந்த வரையறைக்குள் அடங்கும் விளையாட்டுகள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டன[3]. இருப்பினும் உடல் ரீதியான நடவடிக்கைகள் ஏதுமின்றி போட்டியிடத் தக்க பல விளையாட்டுகள் மன விளையாட்டுகள் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சதுரங்கம், சீட்டுக்கட்டு போன்ற விளையாட்டுகளை அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது.
உலகளாவிய அளவில் விளையாட்டுத் தொழில் 2013 ஆம் ஆண்டு வரை $ 620 பில்லியன் மதிப்புள்ளதாக இருந்ததாக ஏ.டி. கியர்னி என்ற ஆலோசனை மையம் தெரிவிக்கிறது [4].
பெயர்க்காரணம்:
விளையாட்டுப் போட்டியைக் குறிக்கும் "Sport" என்ற ஆங்கிலச் சொல் ஓய்வு என்ற பொருள் கொண்ட பழைய பிரெஞ்சு சொல்லான desport என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஓய்வு நேரத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்கப் பயன்படுவது விளையாட்டு என்ற வரையறை 1300 ஆம் ஆண்டிலேயே பழைய ஆங்கிலத்தில் இருந்துள்ளது [5].
வரையறை:
அனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டி என ஒரு விளையாட்டைக் கருத பின் வரும் சில அம்சங்கள் அவ்விளையாட்டில் இருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கிறது: [2].
• போட்டி மனப்பாங்கு கொண்டதாக இருக்க வேண்டும்.
• எந்த உயிரினத்திற்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது.
• விளையாட்டுக் கருவிகள் உற்பத்தி ஒரு தனி நபரைச் சார்ந்திருக்கக் கூடாது.
• யோகத்தால் வெல்வதாக விளையாட்டு அமையக்கூடாது.
விளையாட்டின் வகைகள்:
விளையாட்டை, விளையாடப்படும் இடத்தின் அடிப்படையில்: உள்ளக விளையாட்டு வெளியக விளையாட்டு எனவும், நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்: தனிநபர் விளையாட்டு, இரட்டையர் விளையாட்டு, குழுவிளையாட்டு என்றும், பாலினத்தின் அடிப்படையில் ஆடவர் விளையாட்டு பெண்கள் விளையாட்டு என பொதுவாக வகைப்படுத்துகின்றனர். வகைப்பாட்டிலேயே மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, விதிகளின் அடிப்படையில்: பொதுவான விளையாட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு என வகைப்படுத்தலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டை: கால் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு, கை பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு, கைகால் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டு, பார்வையற்றோருக்கான விளையாட்டு, தசை சிதைவுற்றோருக்கான விளையாட்டு என வகைப்படுத்தலாம்.
பார்வையற்றோருக்கான விளையாட்டின் வரலாறு
16 ஆம் நூற்றாண்டில் பார்வையற்றோருக்கான சதுரங்க விளையாட்டு வடிவமைக்கப்பட்டது. கருப்பு-வெள்ளை கட்டங்களை வேறுபடுத்திக் காட்ட, பார்வையற்றவர்கள் தொட்டுணர ஏதுவாய் பள்ளம் மேடு எனப் பலகைகள் வடிவமைக்கப்பட்டன. சதுரங்க காய்களை பொருத்தும் வகையில் அதில் துளைகள் இடப்பட்டிருந்தன [6]. 1920 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொழிற்சாலையில் பணியாற்றிய பார்வையற்ற பணியாளர்கள், உணவு நேரங்களில் பொழுது போக்குவதற்காக ஒரு டப்பாவில் கற்களைப் போட்டு மட்டையால் அடித்து விளையாடினர். இதுவே பார்வையற்றவர்களுக்கான மட்டைப் பந்தாட்டம் (cricket)உருவாக வழிவகுத்தது. பார்வையற்றவர்களுக்கான மட்டைப் பந்தாட்டப் போட்டி 1922 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடத்தப்பட்டது [7].
1981ஆம் ஆண்டு சர்வதேச பார்வையற்றவர்களுக்கான விளையாட்டு கூட்டமைப்பு [The International Blind Sports Federation] (IBSA) பிரான்சில் உள்ள பாரீசில் தொடங்கப்பட்டது [8]. பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுக்களை வடிவமைத்தல், புதிய விதிகளை அமல்படுத்துதல், உலகமுழுவதும் நடக்கும் பார்வையற்றோருக்கான போட்டிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்கிறது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை பார்வையற்றோருக்கான சர்வதேசப்போட்டிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது..
பாரா ஒலிம்பிக் இயக்கம் (Paralympic Movement)
உலகப்போர்களின் பாதிப்பால் பலரும் ஊனமாக்கப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்கு அரசுகள் உணவு மட்டுமே வழங்கின. அரசு தங்களை கைவிட்டுவிட்டது எனக்கூறி, போரினால் ஊனமாக்கப்பட்ட ராணுவ வீரர்கள் அணிதிரண்டனர். சம வாய்ப்பு சம உரிமை என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். அவர்களோடு பிற மாற்றுத்திறனாளிகளும் இணைந்துகொண்டனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் மட்டுமல்லாது விளையாட்டிலும் தங்களை அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரினர். இதுவே பாரா ஒலிம்பிக்இயக்கமென அழைக்கப்படுகிறது.
1944-ஆம் ஆண்டு லட்விக் கட்மென் (Ludwig Guttmann) போரினால் தண்டுவடம் மற்றும் கைகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ஸ்டோக் மேன்வில் (Stoke Mandeville) மருத்துவமனையில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இவரின் முயற்சியால் 1948-ஆம் ஆண்டு நடந்த  ஒலிம்பிக் போட்டியில், போரில் கைகால்களை இழந்த  16 இராணுவ வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர் [9]. இவர்களுக்குத் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் ஸ்டோக் மேன்வில் போட்டிகள் (Stoke Mandeville Games) என அழைக்கப்பட்டன. இப்போட்டிகளே பாரா ஒலிம்பிக் போட்டியாக வளர்ச்சியடைந்தது. 1960-ஆம் ஆண்டிலிருந்து  பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 1976-இல் தான் பார்வைமாற்றுத்திறனாலிகள் இப்போட்டியில் களந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இன்று பொதுநலவாய போட்டிகள், ஆசியப்போட்டிகள், தெற்காசியப்போட்டிகள் என முக்கியமான விளையாட்டு தொடர்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நடத்தப்படுகின்றன.
ஊனத்தின் தன்மை:
1980-ஆம் ஆண்டு மருத்துவரீதியாக ஊனம் அளவிடப்பட்டு, மாற்றுத்திறனாளி வீரர்கள் வகைப்படுத்தப்பட்டனர்.
பார்வையற்றோருக்கான விளையாட்டைப் பொருத்தவரை,விழிச்சவாலர்கள் 3 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.90 முதல் 100 சதவீதம் பார்வைத்திறனற்றவர்கள் (b1). 3 மீட்டர் தூரத்திற்குள் பொருட்களைப் பார்க்க முடிந்தவர்கள் (b2). 6 மீட்டர் தூரம் வரை பார்க்கும் திறனுடையவர்கள் (b3). குழு விளையாட்டுகளில் 3 பிரிவினரும் குறிப்பிட்ட வீதத்தில் கலந்திருப்பர். தனி விளையாட்டுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
பார்வையற்றோருக்கான விளையாட்டின் கூறுகள்:
கீழ்க்காணும் கூறுகளை பார்வையற்றோருக்கான விளையாட்டுகள் கொண்டிருக்கும்.
1. பந்துகள் தரையில் உருண்டு வருதல்
      மட்டைப் பந்தாட்டம் கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பந்துகள் தரையில் உருண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
2. ஒலி எழுப்பும் பந்துகள்:
கால்பந்தாட்டம், மட்டைப் பந்தாட்டம் போன்றவற்றில் ஒலியெழுப்பும் பந்துகள் பயன்படுத்தப்படும்.
3. உதவியாளரின் வழிகாட்டல்
முழுப் பார்வையற்றவர்கள் ஓட்டப்பந்தயத்தில் உதவியாளரின் துணையுடன் ஓடுவர். கால்பந்தாட்டத்தில் எதிரணியின் கோல் கம்பத்திற்கு பின்னே நின்று ஒருவர் வழிகாட்டுவார்.
4. பிரெயில் குறிப்புகள்
பார்வையற்றவர்களுக்கான  கார் பந்தயத்தில் வழிகாட்டும் குறிப்புகள் பிரெயிலில் தரப்பட்டிருக்கும். அதைப் படித்து பார்வையற்றவர் வழிகளைச் சொல்வார்.
5.  மேடு பள்ளம்
கபடி உள்ளிட்ட போட்டிகளில் எல்லை கோடுகள் காலில் தெரிவது போல மேடுறுத்தப்பட்டுக் காட்டப்படும்.
6. வெள்ளை நிற பந்துகள்
குறைப்பார்வை உடையவர்களுக்கும் தெரிவதற்காக வெள்ளை நிறத்திலான பந்துகளே பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய கூறுகளின் அடிப்படையிலேயே பார்வையற்றவர்களுக்கான விளையாட்டுக்கள் வடிவமைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பார்வையற்றோருக்கான விளையாட்டு:
.  தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசும் ஒவ்வொரு ஆண்டும் பல போட்டிகளை நடத்தி வருகின்றன. சதுரங்கம், மட்டைப் பந்தாட்டம், கரப்பந்தாட்டம் (volleyball) ஆகிய போட்டிகள் அதிகம் நடத்தப்படுகின்றன. இதன் பயனாய் பலரும் சதுரங்கத்தில் சர்வதேச அளவில் சாதித்துள்ளனர். மட்டைப் பந்தாட்டத்தில் இந்திய அணியில் இருவர் தற்போது விளையாடி வருகின்றன. கால்பந்து மற்றும் தடகள போட்டிகள் அரிதாகவே நடத்தப்படுகின்றன.
மேசைப்பந்தாட்டம், ஏர்ஹாக்கி, 9ஸ்பின் பவ்லிங் [Nine-pin bowling}, 10ஸ்பின் பவுலின் [Ten-pin bowling], குறிப்பிட்ட இலக்கை நோக்கி எரியும் கோல்பால் [golball], டோபால் [torball] பொன்ற போட்டிகளையும்  தமிழக வீரர்கள் விளையாடக் கற்றுக்கொள்ளவேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:
ஆயிரக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமிழகத்தில் பயின்று வருகின்றனர். அவர்களிடையே விளையாட்டு குறித்த ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. அவர்கள் சாதிப்பதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பலரும் சவால்களை எதிர்கொள்ள இயலாது தங்கள் கனவுகளைப் புதைத்து விடுகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அதற்கான தீர்வுகளையும் காண்போம்.
வழிகாட்டல் இன்மை:
  பார்வையற்ற விளையாட்டு வீரர்களுள் பலர் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு நுணுக்கங்களை கற்றுத் தருவதற்கு பயிற்சியாளர்கள் இல்லை. பல சிறப்புப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை. எஞ்சியிருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கான விளையாட்டு குறித்த விதிகளும் தெரிவதில்லை. பலரும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட பிறகே விதிகளைத் தெரிந்து கொள்கின்றனர். அவர்கள்தான் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர். என்னென்ன விளையாட்டுப்போட்டிகள் இருக்கின்றன, அவை எங்கே நடைபெறுகின்றன, அவற்றிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற எவ்வித நடைமுறையும் தெரியாததால் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஒரு குறிப்பிட்ட எல்லையோடு முடங்கி விடுகின்றனர்.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் விளையாட்டு விதிமுறைகளின் காணொளிகளை நேரடியாகப்   பார்த்து கற்றுக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு அமைப்பிற்கும் இருக்கும் இணையதளத்திற்குச் சென்று நடைபெறும் போட்டிகள் குறித்த அறிவிப்புகளைப் பார்த்து அதற்காக விண்ணப்பிக்கலாம்.
கட்டமைப்பு வசதிகள் போதாமை:
விளையாட்டு வீரர்களுக்குத் தொடர் பயிற்சிகள் அவசியம். அவ்வாறு பயிற்சி செய்வதற்குப் பார்வை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மைதானங்கள் கிடைப்பதில்லை. சிறப்புப் பள்ளிகளில் பயிலும் வரை அங்குள்ள மைதானங்களைப் பயன்படுத்தி பயிற்சி எடுக்கின்றனர். உயர்கல்விக்காக வேறு இடம் செல்லும் பொழுது அவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு அற்றுப் போகிறது. இதனால் விளையாட்டு தொடர்களின் போதே மைதானங்களில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இருந்தபோதும் அத்தகைய தொடர்களிலும் அவர்கள் சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். பார்வையற்றவர்களுக்கான விளையாட்டு அமைப்புகளும், போட்டிகளை நடத்த மைதானங்களைக் கல்லூரி மற்றும் பள்ளிகளிடமிருந்துதான் பெருகின்றன. அம்மைதானங்களும் பார்வையற்றவர்களுக்கு உகந்ததாக இருப்பதில்லை அவற்றையெல்லாம் தாண்டிதான் பார்வை மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகின்றனர். இதற்கான ஒரே தீர்வு, மாவட்டம் தோறும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மைதானங்களைத் தமிழக அரசு  உருவாக்க வேண்டும்.
உதவியாளர்களை ஏற்பாடு செய்ய இயலாமை:
தமிழகத்தில் கரப்பந்தாட்ட சங்கம், சதுரங்க சங்கம், பார்வையற்றோருக்கான மட்டைப்பந்தாட்ட சங்கம் எனப் பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. தேசிய அளவிலான போட்டிகள் குறித்த சுற்றறிக்கைகள் இதுபோன்ற சங்கங்களுக்கும் சிறப்பு பள்ளிகளுக்குமே அனுப்பப்படுகின்றன. வீரர்களை நீண்ட தூரம் அழைத்துச் செல்வதற்கு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். உதவியாளர்களை ஏற்பாடு செய்ய இயலாது இத்தகைய போட்டிகளை புறக்கணித்து விடுகின்றனர். இதனால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் வீரர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. விளையாட்டு சங்கங்களும் மாநில அளவிலான போட்டிகளை நடத்துவதோடு தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்கின்றன. தமிழகத்தைத் தாண்டி தொடர்புகளை அவர்களும் ஏற்படுத்த விரும்புவதில்லை.  உதவியாளர் பிரச்சனையால் தமிழகத்தில் பெண்கள் தொடர்பான விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இப்பிரச்சனையைத் தீர்க்க குறை பார்வை உடைய வீரர்களின் பொறுப்பில் முழுப் பார்வையற்றவர்களை அனுப்பலாம். பள்ளிகளைப் பொறுத்தவரை ஏதேனும் ஒரு ஆசிரியர் பொறுப்பு எடுத்து மாணவர்களை இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லலாம்.
பொருளாதாரச் சிக்கல்:
மாநில அளவிலான போட்டிகள் நன்கொடையாளர்களின்  உதவியுடனேயே   நடத்தப்படுகின்றன. போட்டி நடத்தத் தேவையான நிதி வளத்தைத்திரட்ட மிகுந்த போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. மிகக் குறைவாகவே பரிசுத் தொகை அளிக்கப்படுகின்றது. சில நேரங்களில் பரிசுத்தொகை ஏதுமின்றி வீரர்கள் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் சாதித்தாலும் அரசுப் பணி எதும் கொடுக்கப்படுவதில்லை. அரசாங்கத்தால் தரப்படும் ஊக்கத்தொகையும் மிகக் குறைவாகவே உள்ளது. பார்வைமாற்றுத்திறனாளி வீரர்களும் இத்தேசத்திற்காகத்தான் விளையாடுகின்றனர். ஆனாலும் அவர்கள்  நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கரை செலுத்துவதில்லை. இதனால், பலரும் விளையாட்டை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். பார்வையற்ற வீரர்கள் ஊனத்தால் ஏற்படும் சவால், பொருளாதார சவால் போன்றவற்றோடே களத்தில் உள்ள சவாலை வெல்கின்றனர். அவர்களுக்குப் பயிற்சி அளித்து பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்ப அரசே திட்டம் வகுத்துச் செயல்படுத்தவேண்டும். அல்லது விளையாட்டு சங்கங்களுக்கு நிதி வளத்தை அளித்து அரசு மேற்பார்வை செய்யலாம். சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களது பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
புறக்கணிப்பு
தமிழகத்தில் முழுப் பார்வையற்றோரின் திறமைகள் புறக்கணிக்கப்படுகின்றன. விளையாட்டில் குறை பார்வையற்றவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. முழுப் பார்வையற்றோர் சிறப்பாகச் செயல்பட்டால் அவருக்குப் பார்வை தெரிகிறது எனக் கூறி அழுத்தங்கள் தரப்படுகின்றன. உதாரணமாக ஒரு நிகழ்வைப் பார்ப்போம். விபத்தினால் முழுப் பார்வை இழந்த ஒருவர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார் (batting). அவருக்குப் பார்வை தெரிகிறது என எதிரணியினர் அழுத்தங்களைத் தரத்தொடங்கினர். விபத்தில் இரு விழிக்கோளங்களும் சிதைந்ததால், அவருக்கு இரு கண்களிலும் நெகிழி கண் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கழட்டி தனக்கு முழுமையாகப் பார்வை தெரியாது என்பதை நிரூபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எனவே முழுப் பார்வையற்ற வீரர்களின் திறமையை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் மீது சிறப்பு கவனம் எடுத்து விளையாட்டு அமைப்புகள் திறமையை வளர்த்தெடுக்க வேண்டும்..
பார்வையற்றோருக்கான விளையாட்டின் எதிர்காலம்:
2016 பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வென்றதால் தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத்தொடங்கியிருக்கிறது. பல செய்தி ஊடகங்களின் வரவு பார்வை மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு நிகழ்வுகளைப் பல இடங்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளும் சமூக ஊடகங்களின் வாயிலாகப் பார்வையற்றோர் விளையாட்டு குறித்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்கின்றன. இதனால் பார்வையற்றோருக்கான விளையாட்டு குறிப்பிட்ட அங்கீகாரத்தைப் பெற தொடங்கி இருக்கிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய மட்டைப்பந்தாட்ட சங்கம் 2018-இல் மைதானங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையற்றவர்களுக்கான மட்டைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. மேலும், ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதியைப் பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து  சங்கத்திற்கு வழங்குகிறது. இதனால்,  தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களைச் சேர்ந்த மட்டைப்பந்தாட்ட அணிகள் பயன் பெறுகின்றன.
 இந்திய பார்வையற்றோர்  கால்பந்து சம்மேளனம், மதுரையில் பார்வையற்றவர்களுக்காக கால்பந்தாட்ட மைதானத்தை அமைக்கத்தொடங்கி இருக்கிறது. இம்மைதானம் பயன்பாட்டிற்கு வந்தால்,  தமிழக வீரர்கள் கால்பந்தாட்டத்தில் சாதிப்பதற்கு உதவியாக இருக்கும்.
தமிழக பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் பிற போட்டிகளுக்கான பிரதிநிதியாக இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அளவிலான போட்டிகளுக்கு பார்வையற்ற வீரர்களைத் தயார்படுத்தி அழைத்துச் செல்லும் பணியைச் செய்கிறது. மேலும், இவ்வமைப்பு வீரர்களுக்குச் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிர்ச்சியளித்து வருகிறது.
இவ்வாறு தமிழகத்தில் பார்வையற்றோருக்கான விளையாட்டு குறித்த செயல்பாடுகள் வேகமெடுக்கத்தொடங்கியிருக்கின்றன. இச்செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், தொய்வின்றியும் நடைபெற்றால், பார்வைமாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வருங்காலம் வளமானதாய் அமையும்.
முடிவுரை
இச்சமூகம் ஊனமுற்றவர்களுக்குத் தன்னம்பிக்கை கதைகளைக் கூறுவதோடு நின்று விடுகிறது. அவர்களை எழுந்து நடக்கக் கூட அனுமதிப்பதில்லை. பெற்றோரும் சுற்றத்தாரும் அக்கறை என்ற பெயரில் அவர்களை ஒரு ஓரத்தில் அமர வைத்து விடுகின்றனர் . முழுப் பார்வையற்றவர்களுக்கு வேகமாக ஓடுதல் கூட நிறைவேறா ஆசையாக இருக்கிறது. பார்வையற்றவர்கள் தங்களுக்கான விளையாட்டு உரிமையைக் கூட போராடியே பெற்றனர். பார்வைமாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை அரசுகள் அங்கீகரிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தாலும், விளையாட்டில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எடுத்துவரும் தற்போதைய முயற்சிகள் பார்வையற்றோருக்கான விளையாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது. இன்றைய நிலையில் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் பார்வையற்றோர் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

பார்வையற்ற பட்டதாரிகள் சங்கம் நடத்திய கருத்தறங்கிற்காக எழுதிய கட்டுரை இது.
சான்றென் விளக்கம்:
1 "தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் நூட்பா ௨௫௫"
2 "Definition of sport". SportAccord.
https://www.sportaccord.sport/en/members/definition-of-sport
3 "Sports | List of Summer and Winter Olympic Sports"
https://www.olympic.org/sports
4 "Game, sex and match - Women in sport - The Economist”
https://www.economist.com/international/2013/09/07/game-sex-and-match
5. Harper, Douglas. "sport (n.)". Online Etymological Dictionary.
6 "Anthony Saidy and Norman Lessing,  The World of Chess, by1974, p. ௨௨".
7 "Cricket Association for the Blind in India"
https://www.blindcricket.in/about/blind-cricket
8 History - IBSA - International Blind Sports Federation
www.ibsasport.org/history/
9 "Paralympics - History of the movement".
https://www.paralympic.org/the-ipc/history-of-the-movement<>aria-readonly>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக