இங்கே துலாவு

திங்கள், 21 ஜனவரி, 2019

என்னை எனக்கே தெரியாது


மதுரையில் படிக்கும்வரை எந்நேரமும் மைதானத்தில்தான் கிடப்பேன். மதுரையை விட்டு வந்த பிறகு, tournament இல் மட்டும் தான் மைதானங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்முறை ஒரு வாரம் தொடர்ச்சியாக மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
வீட்டிற்கு வந்ததும், ஆளே அடையாளம் தெரியலையே என்னடா இப்படி கருத்து போயிட்ட? பிறகு எப்போதும் சொல்லும் வழக்கமான கதையை சொல்லத் தொடங்கினாங்க அம்மா. உனக்கு கண்ணு தெரியலன்னு தெரிஞ்ச உடனே, தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல கொண்டுபோய் சேர்த்தோம். ஒரு வாரம் பெட்டுல இருக்க சொன்னாங்க. அப்போ நீ ஆறு மாத கைக்குழந்த. நீ கொழுகொழுன்னு தும்பைப்பூ கலர்ல இருப்ப. ட்ரெய்னிங் வந்த புள்ள எல்லாம், தினமும் உன்னை கொஞ்ச நேரம் தூக்கி வச்சு இருந்துட்டு ஒரு சாக்லேட் கொடுத்து விட்டு போகுங்க. அப்படி இருந்த நீ இப்போ கழுக்கழுவா போயிட்ட. இதே கதையை முன்பொருமுறை சொல்லிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில், நான் என்ன கலரும்மா? எனக் கேட்டேன். மாநிரண்டா எனச் சொன்னார்கள்.
என்னுடைய நெரத்தை கூட இன்னொருவரை கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்காக வருந்தி நீங்கள் யாரும் சோக பின்னூட்டங்களை இடவேண்டாம். நான் ஒருபோதும், எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள், உலக அதிசயங்கள் போன்றவற்றை காண முடியவில்லையே என வருந்தியதில்லை. நான் எப்போதும் கற்பனையில் எனக்கு பிடித்தமான உலகை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது, யானை என்ற சொல்லின் உச்சரிப்பை வைத்து அது வழு வழு என இருக்கும் என நினைத்தேன். நேரடியாக தொட்டுப் பார்த்தபோது என் கற்பனைகள் சிதறி போயிற்று. அதனால்தான் சொல்கிறேன், அழகான ஒரு உலகத்தை நான் சிஸ்ரித்து வைத்திருக்கிறேன். எனவே இந்த உலகை காண முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இல்லை.
பார்வையற்றவர்களுக்கு நிறங்களை உணர்த்துதல் கடினம். நண்பர்கள் என்னிடம், உன்னோட மனைவி கருப்பா இருக்கனுமா, சிவப்பா இருக்கனுமா, மாநிறமா இருக்கணுமா எந்த நெறத்தில் இருந்தா உனக்கு பிடிக்கும். அவர்களிடம் நான் எப்படி சொல்வேன், கருப்பு சிவப்பு மாநிறம் எல்லாமே எனக்கு வெறும் சொல்தான். அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று.
வர்ணனை கவிதைகளை என்னால் எழுதிவிட முடியும், கீழே உள்ள பாடல்வரிகளை கூட லைத்து பாடமுடியும், ஆனால் நிறங்கள் பற்றிய என்னுடைய கற்பனை மிகவும் வேறானது!



4 கருத்துகள்:

  1. இந்த அம்மாக்களுக்கு இதுதான் வேலையே. சின்ன வயசில கொழு கொழுன்னு இருந்த எல்லா பொண்ணுங்களும் உண்டு வந்து கொஞ்சம் வாங்க அப்படின்னு சொல்லுவாங்க. என்னை கூட எங்க அம்மா சொல்லுவாங்க நீ வெள்ளைக்காரன் புள்ள மாதிரி இருந்த அப்படின்னு. ஆனா இப்ப வந்து எந்த பொண்ணு நம்மள அப்படி கொஞ்சம் மாட்டேன் என்கிறார்களே அப்படி என்கிற வருத்தம் நம்மை யார் கிட்ட சொல்லுறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம கவலையே யாரு கிட்ட சொல்லுறது அதுதான் போஸ்டாவே போட்டுட்டேன் . பிளாக்கரில் அலைன்மென்ட் பிரச்சனை இருக்கிறது அதனால் சரிசெய்தும் பார்வையற்றவர்கள் நகர்த்தி படிப்பதற்கு ஏதுவாக மாற்ற இயலவில்லை.

      நீக்கு