இங்கே துலாவு

திங்கள், 5 டிசம்பர், 2016

கணேசன் போட்ட பிள்ளையார் சுழி

வாழ்க்கையில் நடிப்பவன் மனிதன்; நடிப்பால் வாழ்பவன் கலைஞன். பாடல்கள் பாடுபடுத்திய தமிழ்த்திரையைத் தெளிவாய்ப் பேசவைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
1.10.1928-ல் விழுப்புரத்தில் சின்னய்யா, ராஜாமணி இணையருக்கு  மகனாக இவர் பிறந்தார்.



   விடுதலைப் போராட்டத்தில் தந்தை சிறைப்பட, குடும்பம் துயருற அவர் நாடகக் குழுக்களை நாடினார். அங்குதான் பரதம், மணிப்புரி, கதக்களி நடனங்களைக் கற்றார்.
நாடகங்களில் பெண்கள் நடிப்பதற்குப் பல இடையூறுகள் இருந்ததால் ஆண்களே பெண்வேடங்களில் நடித்தனர். அவ்வாறு பெண் வேடங்களில் கணேசன் நடித்தார்."சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" இது அண்ணாவின் நாடகம். நீளமான வசனங்களைக் கொண்டது.  இதில் சிவாஜியாய் நடித்த கணேசனின் நடிப்பைப் பாராட்டி தந்தை பெரியார் "சிவாஜி கணேசன்" எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தார்.
வாய்ப்புகள் கொடுக்கவில்லை திரையில் நடிக்க, இவரின் குதிரை முகத்தைக் கண்டு; அவருக்குள் இருந்த குதிரை வேகத்தைக் கண்டார் பெருமாள். பலன்1952-ல் வெளிவந்தது. பராசக்தி வடிவில் வரிசையில் நின்றது கூட்டம்-வசனத்திற்காக.
வசனம் புத்தகமாக வெளிவந்த முதல் தமிழ்ப்படம் இதுதான். பராசக்தி, சிவாஜியின் மனன சக்திக்குக் கிடைத்த வெற்றி.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என்ற 5 மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்தார். மக்களைப் பாடல்கள் பாடுபடுத்திய அந்த நாளில் பாடலில்லா "அந்த நாள்" 1954-ல் வெளிவந்தது.
தமிழகத்தில் முதல் ஆளுயரக் கட்ட அவுட் வைக்கப்பட்டது "மனோகரா"வுக்கு. முதல் சினிமாஸ்கோப் தமிழ்ப்படம் "ராஜராஜ சோழன்". ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் "தெய்வமகன்". T. ராஜேந்திரன் படங்களுக்கு வழியமைத்த "பாசமலர்", விஜயகாந்த் படங்களுக்கு வழிவகுத்த "தங்கபதக்கம்", நவரசங்கள் ததும்பும் ஒன்பது வேடங்களில் "நவராத்திரி". சரித்திர நாயகர்கள், புராண புருஷர்கள், மாற்றுத் திறனாளி என எல்லா வேடங்களிலும் நடித்து தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்கு கணேசனே பிள்ளையார் சுழி போட்டார்.
ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் ஓடாது என்பார்கள். ஆனால் அவ்வாறு வந்த சிவாஜியின் 34 படங்களில் 15 மகத்தான வெற்றி பெற்றன. தமிழகம் இவர் நடிப்பைப் பார்த்து வியந்தபோது சர்வதேசம் இவரைப் பாராட்டத் தொடங்கி விட்டது. 1960-ல் கெய்ரோ ஆசியத் திரைப்பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு" சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. தாதா சாகிப் பால்கே விருது கொடுத்து இந்தியா அவரை கௌரவப்படுத்தியது. பிரஞ்சு அரசு செவாலியர் விருது கொடுத்து பெருமைப்படுத்தியது. நயாகரா நகரில் ஒருநாள் மேயராகவும், கொலம்பஸ் நகரின் குடிமகனாகவும் அந்தஸ்து தந்து அமெரிக்கா கௌரவப்படுத்தியது. தமிழ் திரைஉலகின் திருப்பு முனைகளில் பெயர் பதித்தவர் அரசியலிலும் குதித்தார்.
1950-ல் தி.மு.க.வில் இருந்த அவர் 1960-க்குப் பின் காங்கிரஸில்  இணைந்தார். 1987-ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்று சுயமாகக் கட்சி தொடங்கினாலும் அது தோல்வியிலேயே முடிந்தது.
பணிவும், துணிவும் உள்ளவன் உயர்வான் என்பதற்கு சிவாஜியே சான்று. வெள்ளித்திரை சிவாஜியைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. "அவரை ஒரு சிங்கமென்று சொல்லிக்கொண்டு, தயிர்சாதம் கொடுத்தே கொன்றுவிட்டது தமிழ் திரையுலகம்" என்கிறார் கமலஹாசன். பராசக்தியில் தொடங்கிய திரைப்பயணம் படையப்பாவில் முடிந்தது. 21.7.2001-ல் அவர் உயிர் பிரிந்தது.
2011-ஆம் ஆண்டு விழிச்சவால் இதழுக்கு நான்  எழுதிய கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக